கோல சிலாங்கூர், ஜூன் 7- அதிகமான தொழிற்சாலைகள் செயல்பட அனுமதிப்படும் பட்சத்தில் கோவிட்-19 நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த அமல்செய்யப்பட்டுள்ள முழு அளவிலான நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அர்த்தமற்றதாகிவிடும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
அதிகமான தொழிற்சாலைகள் செயல்பட வழங்கப்பட்ட அனுமதி நிலைமையை இன்னும் மோசமாக்கி நாட்டின் சுகாதார சேவையை சீர்குலைத்து விடும் என்பதால் அந்த முடிவை அரசாங்கம் மறுஆய்வு செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
அதிகமான தொழிற்சாலைகளையும் ஸ்தபானங்களுளையும் செயல்பட அரசாங்கம் அனுமதித்த காரணத்தால் முழு அளவிலான நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை என்ற சொல்லுக்கே அர்த்தமில்லாமல் போய்விட்டது. மேலும், அந்த அந்த சொல்லுக்கும் நடைபெறும் செயல்களுக்கும் எந்த தொடர்பு இல்லாமல் போய்விட்டது என்றார் அவர்.
நாட்டின் பாதுகாப்புக்கும் சுகாதாரச் சேவைக்கும் அச்சுறுத்தல் ஏற்படுவதை தவிர்க்க இம்முடிவு மறுஆய்வு செய்யப்பட வேண்டும். மருத்துவமனைகளின் தீவிர சிகிச்சை பிரிவுகளில் உள்ள கட்டில்களின் பயன்பாடு 100 விழுக்காட்டை தாண்டிவிட்டது. அனைத்து துறைகளும் தொடர்ந்து செயல்பட அனுமதிக்கப்பட்டால் இதற்கு மேலும் சுமையை தாங்க இயலாத நிலை மருத்துவமனைகளுக்கு ஏற்படும் என்று அவர் சொன்னார்.
நாட்டில் கோவிட்-18 நோய்த் தொற்றின் தினசரி எண்ணிக்கை எட்டாயிரத்தை தொட்டதைத் தொடர்ந்து அரசாங்கம் நாட்டில் முழு அளவிலான நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை கடந்த ஜூன் ஒன்றாம் தேதி தொடங்கி 14 நாட்களுக்கு அமல் செய்தது.


