ஷா ஆலம், ஜூன் 6- சிலாங்கூர் அரசுக்கு 29 லட்சம் கோவிட்-19 தடுப்பூசிகள் வழங்கப்பட்டதாக தாங்கள் குறிப்பிட்டது தவறு என்பதை சி.ஐ.டி.எஃப். எனப்படும் கோவிட்-19 தடுப்பூசி பணிக்குழு ஒப்புக் கொண்டது.
இம்மாதம் முதல் தேதி வரை 615,210 தடுப்பூசிகள் மட்டுமே சிலாங்கூருக்கு வழங்கப்பட்டுள்ளதாக அந்த பணிக்குழு அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளதாக புளுகோட் அகப்பக்கம் தெரிவித்தது.
நாடு முழுவதும் விநியோகிப்பதற்காக அரசாங்கத்தின் பாதுகாப்பிலும் சிலாங்கூரிலுள்ள விநியோகிப்பாளர்களின் கிடங்குகளிலும் வைக்கப்பட்டிருக்கும் மொத்த தடுப்பூசிகள் எண்ணிக்கையே புளுகோட் அகப்பக்கத்திடம் வழங்கப்பட்டதாக அந்த அறிக்கை கூறியது.
இதன் வழி சிலாங்கூருக்கு அதிகப்பட்சமாக 615,210 தடுப்பூசிகளும் அதற்கு அடுத்து கோலாலம்பூர் மற்றும் புத்ரா ஜெயாவுக்கு 578,130 தடுப்பூசிகளும் ஜொகூருக்கு 370,680 தடுப்பூசிகளும் வழங்கப்பட்டுள்ளன.
தடுப்பூசி விநியோகம் தொடர்பில் புளுகோட் அகப்பக்கத்திற்கு தவறான தகவலை வழங்கியதற்காக வருத்தம் அடைகிறோம் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சிலாங்கூர் மாநிலத்திற்கு இதுவரை 615,210 தடுப்பூசிகள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சித்தி மரியா மாமுட் அண்மையில் கூறியிருந்தார்.
சிலாங்கூர் மாநிலத்திற்கு 29 லட்சம் தடுப்பூசிகள் வழங்கப்பட்டதாக அறிவியல், தொழில்நுட்ப மற்றும் புத்தாக்கத்துறை அமைச்சை மேற்கோள் காட்டி வெளியான செய்தியை மறுக்கும் வகையில் இந்த விளக்கத்தை அவர் அளித்திருந்தார்.


