நோய்த் தொற்று அதிகம் உள்ள இடங்களில் இரண்டாம் கட்ட கோவிட்-19 பரிசோதனை இயக்கம்
கோல சிலாங்கூர், ஜூன் 6- இரண்டாம் கட்ட கோவிட்-19 இலவச பரிசோதனை இயக்கத்தை நடத்த சிலாங்கூர் அரசு திட்டமிட்டுள்ளது.
ஐந்து விழுக்காட்டிற்கும் அதிகமான நோய்த் தொற்று உள்ள இடங்களை இலக்காக கொண்டு இவ்வியக்கம் மேற்கொள்ளப்படும் என்று கிளினிக் செல்கேர் நிர்வாகி முகமது நோர் முகமது நாசீர் கூறினார்.
அனைத்து 56 சட்டமன்ற தொகுதிகளிலும் கோவிட்-19 பரிசோதனை இயக்கம் முடிந்த பின்னர் தமது தரப்பும் எஸ்.டி.எப்.ஒ. எனப்படும் சிலாங்கூர் சிறப்பு நடவடிக்கை குழுவும் வழங்கும் அறிக்கையின் அடிப்படையில் இவ்விவகாரம் தொடர்பில் முடிவெடுக்கப்படும் என்று அவர் சொன்னார்.
நோய்த் தாக்கம் அதிகம் உள்ள பகுதிகளில் மறுபடியும் சோதனை மேற்கொள்ள நாங்களும் எஸ்.டி.எப்.ஒ. நடவடிக்கை குழுவும் கொள்கையளவில் முடிவெடுத்துள்ளோம். எனினும், இதன் அமலாக்கம் தொடர்பில் மாநில அரசிடமிருந்து உத்தரவைப் பெற வேண்டியுள்ளது என்றார் அவர்.
இந்த பரிசோதனை இயக்கம் முழுமையாக முடிந்த பின்னர் அதன் விளைவுகளை நாங்கள் ஆராய வேண்டியுள்ளது. இந்த இயக்கத்தின் வாயிலாக நோய்த் தொற்று உள்ளவர்களையும் அறிகுறி ஏதுமின்றி நோய்த் தொற்றை கொண்டிருப்பவர்களையும் தனிமைப்படுத்தி விட்டோம். இதன் அடிப்படையில் பார்த்தால் நோய்த் தொற்று குறைந்தாக வேண்டும் என அவர் மேலும் சொன்னார்.
இங்குள்ள குலாங் குலாங் சமூக மண்டபத்தில் நடைபெற்ற இலவச கோவிட்-19 பரிசோதனை இயக்கத்தின் போது அவர் செய்தியாளர்களிடம் இதனைத் தெரிவித்தார்.
இதுவரை காஜாங், உலு கிளாங், புக்கிட் அந்தாரா பங்சா, சுங்கை துவா, கோம்பாக் செத்தியா, தாமான் டெம்ப்ளர் ஸ்ரீ செத்தியா, தாமான் மேடான் ஆகிய எட்டு தொகுதிகளில் ஐந்து விழுக்காட்டிற்கும் அதிகமான நோய்த் தொற்று சம்பவங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.


