ஷா ஆலம், ஜூன் 6- சிலாங்கூர் மாநிலத்திலுள்ள முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் பராமரிப்பு இல்லங்களில் உள்ளவர்களுக்கு கோவிட்-19 தடுப்பூசி செலுத்தும் இயக்கம் வரும் செவ்வாய்க்கிழமை தொடங்கும்.
பராமரிப்பு இல்லங்களில் தங்கியிருப்பவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியை மேற்கொள்ள 16 குழுக்களை சிலாங்கூர் மாநில சுகாதார இலாகா பணியில் அமர்த்தும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
மாநிலத்திலுள்ள 69 பராமரிப்பு மையங்களில் உள்ள பணியாளர்கள் உள்ளிட்ட 1,893 பேருக்கு தடுப்பூசி செலுத்தும் இயக்கம் கட்டங் கட்டமாக மேற்கொள்ளப்படும் என்று அவர் சொன்னார்.
நோய்த் தொற்று பரவலை தடுப்பதற்கு ஏதுவாக சம்பந்தப்பட்ட மையங்களுக்கு நேரில் சென்று தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
அரசாங்கத்தால் நடத்தப்படுகின்ற பராமரிப்பு மையங்கள், சமூக நல இலாகாவினால் நடத்தப்படும் மையங்கள், சட்டம் 506 மற்றும் சட்டம் 586 இன் கீழ் நடத்தப்படும் லைசென்ஸ் பெற்ற அல்லது லைசென்ஸ் பெறாத மையங்கள் இந்த தடுப்பூசி செலுத்தும் இயக்கத்தில் இடம் பெற்றுள்ளதாக அவர் மேலும் சொன்னார்.


