ஷா ஆலம், ஜூன் 5- கடுமையாக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமல்படுத்தப்பட்ட சபாக் பெர்ணம் மாவட்டத்தின் மூன்று குடியிருப்புகளைச் சேர்ந்த 90 விழுக்காட்டு குடியிருப்பாளர்களுக்கு கோவிட்-19 பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கோவிட்-19 நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 112 இல் இருந்து 115 ஆக உயர்ந்துள்ளதாக சபாக் பெர்ணம் மாவட்ட அதிகாரி அம்ரி இஸ்மாயில் கூறினார்.
அதே சமயம் தீவிர நோய்த் தன்மை கொண்ட நோயாளிகளின் எண்ணிக்கை நாற்பதிலிருந்து 36ஆக குறைந்துள்ளதாகவும் அவர் சொன்னார்.
இந்த நிலவரங்களின் அடிப்படையில் அப்பகுதியில் அமல்படுத்தப்பட்டிருக்கும் கடுமையாக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை முன்கூட்டியே அகற்றுவதற்கான சாத்தியம் உள்ளது. எனினும், இவ்விவகாரத்திற்கு பொறுப்பேற்றிருக்கும் மாவட்ட சுகாதார இலாகாவின் முடிவை பொறுத்து அடுத்தக் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.
நோய்த் தொற்று பரவல் அதிகரிப்பு காரணமாக சபாக் பெர்ணம் மாவட்டத்திலுள்ள தாமான் செரேண்டா, தாமான் பெர்த்தாமா மற்றும் தாமான் பிரிமா ஆகிய குடியிருப்புகளில் கடந்த மாதம் 30ஆம் தேதி தொடங்கி 14 நாட்களுக்கு கடுமையாக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை பிறப்பிக்கப்பட்டது.


