தஞ்சோங் சிப்பாட், ஜூன் 5- சிலாங்கூர் மாநில அரசின் ஏற்பாட்டில் தஞ்சோங் சிப்பாட் தொகுதியில் நேற்று நடைபெற்ற இலவச கோவிட்-19 பரிசோதனை இயக்கத்தில் சுமார் 700 பேர் பங்கு கொண்டனர்.
தஞ்சோங் சிப்பாட் தொகுதி புற நகர்ப் பகுதியில் அமைந்துள்ளதால் தங்களைப் பொறுத்த வரை இந்த பரிசோதனை இயக்கத்தில் கலந்து கொண்டவர்களின் எண்ணிக்கை மிக அதிகமானது என்று தொகுதி சட்டமன்ற உறுப்பினர் புர்ஹான் அமான் கூறினார்.
மாநிலத்திலுள்ள மற்ற தொகுதிகளைக் காட்டிலும் இந்த தொகுதியில் நடைபெற்ற இலவச கோவிட்-19 பரிசோதனை இயக்கத்தில் கலந்து கொண்டவர்களின் எண்ணிக்கை குறைவாகத்தான் உள்ளது. இத்தொகுதி புற நகர்ப்பகுதியில் அமைந்துள்ளது இதற்கு காரணமாக அமைந்துள்ளதே இதற்கான காரணமாகும் என்றார் அவர்.
மூன்று வாரங்களுக்கு முன்னர் இங்கு நடத்தப்பட்ட இலவச கோவிட்-19 பரிசோதனை இயக்கத்தில் சுமார் ஆயிரம் பேர் கலந்து கொண்டதாகவும் அவர்களில் 34 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதாகவும் அவர் சொன்னார்.
இந்த இரு பரிசோதனை இயக்கங்களின் வாயிலாக அதிகமானோர் இந்த இலவச பரிசோதனை இயக்கத்தில் கலந்து கொண்டதை காண முடிகிறது.நோய்த் தொற்றுக்கு எதிராக மக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதை இது புலப்படுத்துகிறது என்றார் அவர்.
இதனிடையே, நேற்று மோரிப் தொகுதி நிலையிலான இலவச கோவிட்-19 பரிசோதனை இயக்கம் பந்திங் பாரு எம்.பி.கே.எல். மண்டபத்தில் நடைபெற்றது.
கடந்த மாதம் 8ஆம் தேதி தொடங்கிய இந்த இலவச கோவிட்-19 பரிசோதனை இயக்கத்தில் இதுவரை 87,903 பேர் பங்கு பெற்றுள்ளனர். அவர்களில் 3.6 விழுக்காட்டினர் அதாவது 3,168 பேர் நோய்த் தொற்றுக்கு இலக்காகியுள்ளது கண்டு பிடிக்கப்பட்டது.


