ஷா ஆலம், ஜூன் 5- கோவிட்-19 தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக கிள்ளான் நகராண்மைக் கழகம் தனது அதிகார வரம்பிற்குட்பட்ட பகுதிகளில் உள்ள 2,410 வியாபார மையங்கள் மீது சோதனை நடத்தியது.
கடந்த ஜனவரி முதல் மே மாதம் வரை மேற்கொள்ளப்ட்ட இச்சோதனையின் போது பல்வேறு குற்றங்களுக்காக 1988ஆம் ஆண்டு தொற்று நோய்த தடுப்புச் சட்டத்தின் (சட்டம் 342) கீழ் 187 வியாபார மையங்களுக்கு எச்சரிக்கை நோட்டீசும் 14 மையங்களுக்கு குற்றப்பதிவும் வழங்கப்பட்டதோடு மேலும் ஏழு மையங்களை மூட உத்தரவிடப்பட்டதாக நகராண்மைக் கழகத் தலைவர் டாக்டர் அகமது பாட்லி அகமது தாஜூடின் கூறினார்.
இது தவிர கிள்ளான் நகராண்மைக் கழகம் துணைச் சட்டத்தின் கீழ் 186 வர்த்தக மையங்களிலிருந்து வியாபார பொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டன என்றார் அவர்.
மேலும், 109 உற்பத்தி தொழிற்சாலைகளும் இக்காலக்கட்டத்தில் சோதனைக்குட்படுத்தப்பட்டன. அவற்றில் 73 தொழிற்சாலைகளுக்கு எச்சரிக்கை அறிக்கைகள் வழங்கப்பட்ட நிலையில் இரு தொழிற்சாலைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது என அவர் தெரிவித்தார்.


