கிள்ளான், ஜூன் 4- கோவிட்-19 நோய்த் தொற்றை ஒழிக்கும் போராட்டத்தில் எதிர்க்கட்சிகளையும் மத்திய அரசாங்கம் இணைத்துக் கொள்ள வேண்டும் என்று கெஅடிலான் கட்சியின் கோத்தா ராஜா தொகுதி தலைவர் டாக்டர் குணராஜ் ஜோர்ஜ வலியுறுத்தியுள்ளார்.
நாடாளுமன்றம் முடக்கப்பட்டுள்ள தற்போதைய சூழலில் கோவிட்-19 நோய்த் தொற்றுப் பிரச்னையைக் களையும் விவகாரத்தில் பிரதமர் டான்ஸ்ரீ மொகிடின் யாசின் எதிர்க்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமுடன் நேரடியாக விவாதிப்பதன் மூலம் இப்பிரச்னைக்கு ஆக்ககரமான முறையில் தீர்வு காண்பதற்குரிய வாய்ப்பு ஏற்படும் என்று அவர் சொன்னார்.
நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்துவதில் அரசாங்கம் தோல்வி கண்டுள்ளதை தெளிவாக காண முடிகிறது. ஆகவே ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்கள் இணைந்து செயல்படுவதன் மூலம் இவ்விவகாரம் மீது பயன்மிக்க பரிந்துரைகளையும் கருத்துக்களையும் முன்வைப்பதற்குரிய வாய்ப்பு ஏற்படும் என்றார் அவர்.
கோவிட்-19 நோய்த் தொற்று பிரச்னைனை நாட்டு மக்களின் உடல் நலனையும் பாதுகாப்பையும் உள்ளடக்கிய விவகாரமாக உள்ளதால் இப்பிரச்னைக்குத் தீர்வு காண்பதில் அரசியல் பேதங்களுக்கு அப்பாற்பட்ட நிலையில் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவது அவசியம் என்று செந்தோசா சட்டமன்ற உறுப்பினருமான அவர் தெரிவித்தார்.


