ஷா ஆலம் ஜூன் 4- இங்குள்ள செக்சன் 19 இல் உள்ள டேவான் தஞ்சோங் மற்றும் டேவான் தெராத்தாயில் கோவிட்-19 தடுப்பூசி பொதுமக்களுக்கு நேரடியாக வழங்கப்படுவதாக வெளிவந்த தகவலை ஷா ஆலம் மாநகர் மன்றம் மறுத்துள்ளது.
பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் மையங்களாக செயல்படுவதற்கு ஏதுவாக அவ்விரு மண்டபங்களும் புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் திறக்கப்படுவதாக சமூக ஊடகங்களில் வெளி வந்த செய்தியில் உண்மை இல்லை என்று அது தெரிவித்தது.
வாட்ஸ்அப் புலனம் வழி பகிரப்பட்ட அத்தகவலில் சிறிதும் உண்மை இல்லை என்று ஷா ஆலம் மாநகர் மன்றத்தின் பொது உறவு மற்றும் வர்த்தக பிரிவு தலைவர் ஷாரின் அகமது கூறினார்.
மாநிலத்திலுள்ள முன்கள்ப பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிக்காக அந்த மண்டபங்களை பயன்படுத்திக் கொள்ள மாநில சுகாதாரத் துறை மாநகர் மன்றத்திடம் அனுமதி கோரியுள்ளது என்று அவர் விளக்கினார்.
எந்த தகவலையும் பகிர்வதற்கு முன்னர் அதன் உண்மைத் தன்மை குறித்து சம்பந்தப்பட்டத் தரப்பினரிம் உறுதி செய்து கொள்ளும்படி பொதுமக்களை அவர் கேட்டுக் கொண்டார்.


