ஷா ஆலம், ஜூன் 4- தற்போது மேற்கொள்ளப்படுவதைக் காட்டிலும் மேலும் அதிகமானோருக்கு கோவிட்-19 தடுப்பூசியை செலுத்தும் ஆற்றலை சிலாங்கூர் கொண்டிருப்பதாக சுகாதாரத் துறைக்கான மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சித்தி மரியா மாமுட் கூறினார்.
எனினும், சிலாங்கூர் மாநிலத்திற்கான தடுப்பூசி விநியோகம் வரையறைக்குட்பட்டதாக உள்ளதால் தங்களால் முழுவீச்சில் தடுப்பூசித் திட்டத்தை மேற்கொள்ள இயலாத நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் சொன்னார்.
இம்மாதம் முதல் தேதி வரை சிலாங்கூர் மாநில சுகாதாரத் துறை 615,000 தடுப்பூசிகளை மட்டுமே பெற்றுள்ளதையும் அவர் சுட்டிக்காட்டினார். 434,070 பைசர் பயோஎன்டெக் தடுப்பூசிகள், 146,440 சைனோவேக் தடுப்பூசிகள் மற்றும் 34,700 அஸ்ட்ராஸேனேகா தடுப்பூசிகள் மட்டுமே சிலாங்கூருக்கு இதுவரை வழங்கப்பட்டுள்ளன என்றார் அவர்.
சிலாங்கூர் மாநிலத்திற்கு 29 லட்சம் தடுப்பூசிகள் கிடைத்துள்ளதாக அறிவியல், தொழில்நுட்ப மற்றும் புத்தாக்கத்துறை அமைச்சை மேற்கோள் காட்டி இணைய ஊடகம் ஒன்று வெளியிட்ட தகவலையும் அவர் மறுத்தார்.


