ஷா ஆலம், ஜூன் 4- சிலாங்கூர் மாநிலத்திற்கு கடந்த ஒன்றாம் தேதி வரை 615,000 தடுப்பூசிகள் மட்டுமே கிடைத்துள்ளதாக சுகாதாரத் துறைக்கான மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சித்தி மரியா மாமுட் கூறினார்.
அறிவியல், தொழில்நுட்ப மற்றும் புத்தாக்கத்துறை அமைச்சின் தரவுகள் காட்டுவது போல் 29 லட்சம் தடுப்பூசிகள் அல்ல என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
இம்மாதம் முதல் தேதி வரையிலான காலக்கட்டத்தில் சிலாங்கூர் மாநில சுகாதாரத் துறை 434,070 பைசர் பயோஎன்டெக் தடுப்பூசிகளையும் 146,440 சைனோவேக் தடுப்பூசிகளையும் 34,700 அஸ்ட்ராஸேனேகா தடுப்பூசிகளையும் பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
ஆகவே, சிலாங்கூர் மாநிலம் 29 லட்சம் தடுப்பூசிகளைப் பெற்றதாக கூறப்படுவதற்கு அறவே சாத்தியம் கிடையாது. கூடுதலாக 25 லட்சம் தடுப்பூசிகளை சிலாங்கூர் பத்திரப்படுத்தி வைப்பதற்கான வாய்ப்பும் இல்லை என்று அறிக்கை ஒன்றில் அவர் கூறினார்.
சிலாங்கூர் மாநிலம் 29 லட்சம் தடுப்பூசிகளை பெற்றுள்ளதாக அறிவியல் மற்றும் புத்தாக்கத்துறை அமைச்சின் தரவுகளை மேற்கோள் காட்டி இணைய ஊடகம் வெளியிட்ட தகவலை மறுத்த அவர், அமைச்சின் தரவுகளில் ஏற்பட்ட குளறுபடி என்பதோடு சிலாங்கூர் அரசு மேற்கொண்டு வரும் தடுப்பூசித் திட்டத்தின் தரவுகளுக்கேற்பவும் இது அமையவில்லை என்றார்.
இது தவிர சில மாநிலங்களில் பெறப்பட்ட தடுப்பூசிகளைக் காட்டிலும் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அமைச்சு வெளியிட்ட தரவுகள் தவறானவையாகவும் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையிலும் உள்ளதை இது காட்டுகிறது என அவர் குறிப்பிட்டார்.


