கிள்ளான், மே 31- நாளை தொடங்கும் முழு அளவிலான நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காலத்தில் இலவச கோவிட்-19 பரிசோதனை இயக்கத்தை தொடர்ந்து நடத்த கிளினிக் செல்கேர் தயாராக உள்ளது.
பொது முடக்க காலத்தில் அதிகமானோர் வீட்டில் இருப்பதற்கான சாத்தியம் உள்ளதால் இதுபோன்ற பரிசோதனை இயக்கங்களில் பெரும் எண்ணிக்கையிலானோர் கலந்து கொள்வதற்குரிய வாய்ப்பு உள்ளதாக இந்த பரிசோதனை இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் அப்துல் ஹட்ரி ஹக்கிம் அப்துல் ரஹ்மான் கூறினார்.
இந்த இலவச கோவிட்-19 பரிசோதனை இயக்கத்தை தொடர்வதா? இல்லையா? என்பது குறித்து இன்று மாலைதான் தெரியவரும். இவ்விவகாரம் தொடர்பில் மந்திரி புசாரின் பதிலுக்காக காத்திருக்கிறோம் என்றார் அவர்.
இங்குள்ள கிளாங் ஜெயா நகராண்மைக் கழக மண்டபத்தில் நடைபெற்ற இலவச கோவிட்-19 பரிசோதனை இயக்கத்தின் போது செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
இந்த பரிசோதனை இயக்கத்தில் கலந்து கொள்ள செலங்கா செயலி வாயிலாக முன்பதிவு செய்து கொள்ள முடியும் என்பதால் இங்கு நெரிசல் ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைவு என்றும் அவர் குறிப்பிட்டார்.
நாளை தொடங்கி இரு வாரங்களுக்கு நாடு முழுவதும் முழு அளவிலான நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை அரசாங்கம் அமல் செய்துள்ளது.


