ஷா ஆலம், மே 31- சிலாங்கூர் மாநில அரசின் ஏற்பாட்டிலான இலவச கோவிட்-19 பரிசோதனை இயக்கம் திட்டமிட்டபடி வரும் ஜூன் மாதம் 10ஆம் தேதி வரை நடைபெறும் என மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
இந்த பரிசோதனை இயக்கத்தை தொடர்ந்து மேற்கொள்ள தேசிய பாதுகாப்பு மன்றம் அனுமதி வழங்கியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
நாளை தொடங்கும் முழு அளவிலான நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காலத்தின் போது இலவச கோவிட்-19 பரிசோதனை இயக்கத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும் அவர் சொன்னார்.
எனினும், இந்த பரிசோதனை இயக்கம் தொடர்பில் தமது தரப்பு காவல் துறைக்கு அறிக்கை சமர்பிக்க வேண்டும் என்பதோடு இனி நடைபெறவிருக்கும் பரிசோதனை இயக்கங்களின் போது பாதுகாப்பும் வலுப்படுத்தப்பட வேண்டும் என்று பணிக்கப்பட்டுள்ளதாக அவர் சொன்னார்.
கோவிட்-19 நோய்த் தொற்றுப் பரவலைத் தடுப்பதற்கு ஏதுவாக அதிக அளவில் கூட்டம் கூடுவதை தடுக்க விரும்புகிறோம். இந்நோக்கத்தின் அடிப்படையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும் என்றார் அவர்.
இங்குள்ள தமது இல்லத்தில் பாலஸ்தீன மனிதாபிமான நிதிக்கு ஷா ஆலம் மாநகர் மன்றத்திடமிருந்து காசோலையைப் பெற்றுக் கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்


