ஷா ஆலம், மே 31- நாளை முதல் அமலுக்கு வரும் முழு அளவிலான நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காலத்தில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த இருவர் மட்டுமே காரில் பயணிக்க அனுமதிக்கப்படுவர்.
அத்தியாவசியப் பொருள்கள் வாங்குவது மற்றும் மருத்துவ சேவையைப் பெறுவது ஆகிய காரணங்களுக்காக மட்டுமே வெளியில் செல்ல அவர்கள் அனுமதிக்கப்படுவர் என்று பாதுகாப்புக்கான முதன்மை அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கூறினார்.
தங்கள் இருப்பிடத்திலிருந்து பத்து கிலோ மீட்டர் சுற்றளவு வரை மட்டுமே பயணிக்க அவர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் டாக்சி மற்றும் கிராப் போன்ற மின்-அழைப்பு வாடகைக்கார்களில் ஓட்டுநர் உள்பட பயணி உள்பட இருவர் மட்டுமே அனுமதிக்கப்படுவதாகவும் அவர் சொன்னார்.
நான்கு முதல் ஆறு வயதினரை உள்ளடக்கிய சிறார் பராமரிப்பு மையங்கள், மழலையர் பள்ளிகள், தனியார் பள்ளிகள், அனைத்துலக பள்ளிகள் மனவளப் பயிற்சி மையங்கள் போன்றவையும் செயல்பட அனுமதிக்கப்படாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
எனினும், தாய், தந்தை இருவரும் முன்களப் பணியாளர்களாக வேலை செய்யும் குடும்பங்களில் இந்த நிபந்தனைகளிலிருந்து விலக்களிக்கப்படுகிறது என்றும் அவர் சொன்னார்.


