கோலாலம்பூர், மே 30- சிலாங்கூரில் மூன்று மிகப்பெரிய தடுப்பூசி செலுத்தும் மையங்கள் வரும் ஜூன் மாதம் 7ஆம் தேதி முதல் செயல்படத் தொடங்கும்.
நோய்த் தடுப்பு ஆற்றல் கொண்ட சமுதாயத்தை உருவாக்கும் திட்டத்தை விரைவுபடுத்தும் நோக்கில் இம்மையங்கள் அமைக்கப்படுவதாக தேசிய கோவிட்-19 தடுப்பூசித் திட்ட ஒருங்கிணைப்பு அமைச்சர் கைரி ஜமாலுடின் கூறினார்.
பெரிய அளவில் தடுப்பூசி மையங்களை திறப்பது உள்ளிட்ட திட்டங்கள் குறித்து சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரியுடன் பேச்சு நடத்தினேன். சிலாங்கூரில் குறிப்பாக கிள்ளான் பள்ளத்தாக்கில் தடுப்பூசி திட்டத்தை விரைவுபடுத்துவதற்கு நாங்கள் இணக்கம் கண்டுள்ளோம் என்றார் அவர்.
அத்தகைய பெரிய தடுப்பூசி மையங்களை அமைப்பதன் வழி தற்போது மேற்கொள்ளப்படும் தடுப்பூசி செலுத்தும் பணியை இரண்டு மடங்காக அதிகரிக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதே போன்ற மையங்கள் தலைநகர் உலக வாணிக மையத்திலும் புக்கிட் ஜாலில் அரங்கிலும் அமைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.


