ஷா ஆலம், மே 30- கோவிட்-19 நோய்த் தொற்றினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டவர்களைக் காட்டிலும் நோயிலிருந்து குணமடைவதற்கான சாத்தியம் அதிகம் உள்ளவர்களுக்கு முதலில் சிகிச்சையளிக்க வேண்டிய நிர்பந்தத்தில் மருத்துவர்கள் உள்ளனர்.
நோயாளிகளை குணப்படுத்துவற்கு நம்மிடம் உள்ள சக்தியை மீறி கடுமையாக பாதிக்கப்பட்ட குறிப்பாக தீவிர சிகிச்சை பிரிவில் அதிகமான நோயாளிகள் இருப்பதே இதற்கு காரணமாகும் என்று சுகாதார அமைச்சின் தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.
தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள கட்டில்களுக்கு எளிதில் குணமாகும் வாய்ப்புள்ள நோயாளிகளைச் தேர்ந்தெடுப்பதா? அல்லது வாய்ப்பு குறைவாக உள்ள நோயாளிகளைத் தேர்ந்தெடுப்பதா? என்ற இக்கட்டான சூழலுக்கு மருத்துவர்கள் தள்ளப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
இதுதான் இன்றைய உண்மையான நிலவரம் என்று நேற்று இரவு தனது டிவிட்டர் பக்கத்தில் அவர் கூறியுள்ளார்.
மரணச் சம்பவங்கள் அதிகரிப்பு காரணமாக நாட்டிலுள்ள ஐந்து மருத்துவமனைகளில் இறந்தவர்கள் உடல்களை பத்திரப்படுத்தி வைப்பதற்காக சிறப்பு கொள்கலன்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் சொன்னார்.


