ECONOMY

நாட்டில் 98  மரணங்கள்: “இது ஒரு கருப்பு தினம்”- நோர் ஹிஷாம் வர்ணனை

30 மே 2021, 6:59 AM
நாட்டில் 98  மரணங்கள்: “இது ஒரு கருப்பு தினம்”- நோர் ஹிஷாம் வர்ணனை

கோலாலம்பூர், மே 30- நாட்டில்  கோவிட்-19 நோய்த் தொற்று தொடங்கியது முதல் அதிக மரணங்களைப் பதிவு செய்த தினமாக நேற்றைய தினம் விளங்குகிறது. இது நோய்த் தொற்று வரலாற்றில் ஒரு கருப்பு தினமாகும் என்று சுகாதார அமைச்சின் தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம்  அப்துல்லா கூறினார்.

புதிதாக பதிவான 98 மரணச் சம்பவங்களையும் சேர்த்து நாட்டில் இந்நோய்க்கு பலியானவர்களின் மொத்த  எண்ணிக்கை 2,650 ஆக உயர்வு கண்டுள்ளதாக அவர் சொன்னார்.

கடந்தாண்டு முழுவதும் 471 மரணச் சம்பவங்கள் மட்டுமே நேர்ந்த வேளையில் இவ்வாண்டின் முதல் ஐந்து மாதங்களில் 2,179 மரணங்கள் நிகழ்ந்துள்ளன என்றார் அவர்.

இவ்வாண்டு மே முதல் தேதி தொடங்கி 29ஆம் தேதிக்குள் மட்டும் 1,144 பேர் மரணமடைந்துள்ளனர். மாதாரந்திர அடிப்படையிலான மரணச் சம்பவங்களில் இதுவே மிக அதிகமாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதன் காரணமாக அரசாங்க மருத்துவமனைகளில் உள்ள சவக்கிடங்குகளில் இடப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. மரணச் சம்பவங்களின் அதிகரிப்பினால் இறந்தவர்களின் உடல்களை பத்திரப்படுத்தி வைப்பதற்கு போதுமான இடங்கள் இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது என்று அவர் வேதனையுடன் தெரிவித்தார்.

ஆகவே, கோவிட்-19 அல்லது வேறு காரணங்களால் உயிரிழந்தவர்களின் உடல்களை பத்திரப்படுத்தி வைப்பதற்காக சுங்கை பூலோ, செலாயாங், ஜோகூர் பாரு, சுல்தானா அமினா, சபா, குயின் எலிசபெத், செர்டாங் ஆகிய ஐந்து மருத்துவமனைகளில் சிறப்பு கொள்கலன்கள் தயார் படுத்தப்பட்டுள்ளன. இது தவிர கிள்ளான், துங்கு அம்புவான் ரஹிமா மருத்துவமனையில் நடமாடும் சவக்கிடங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார் அவர்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.