பொது முடக்கம் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ சிலாங்கூர் அரசு திட்டம்
கிள்ளான், மே 29- பொருளாதார மற்றும் சமூகவியல் நடவடிக்கைகள் அடுத்த வாரம் மூடப்படுவதால் பாதிப்பை எதிர்நோக்கும் தரப்பினருக்கு பொருத்தமான உதவிகளை வழங்குவதற்கான வியூங்களை சிலாங்கூர் அரசு வரையவிருக்கிறது.
மாநிலத்தின் நடப்பு பொருளாதார நிலையை கருத்தில் கொண்டு எத்தகைய உதவிகளை வழங்குவது என்பது குறித்து தீர்மானிக்கப்படும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
இவ்விவகாரம் தொடர்பில் எங்கள் குழுவினருடன் தற்போதுதான் பேச்சு நடத்தினேன். எந்த மாதிரியான உதவிகளை வழங்குவது என்பது குறித்து விரைவில் முடிவு செய்வோம் என்றார் அவர்.
பொது முடக்கம் காரணமாக ஏற்படக்கூடிய பாதிப்புகள் கடுமையாக இருக்கும் எனக் கருதுகிறோம். நிர்ணயிக்கப்பட்ட இரண்டு வாரங்களுக்குள் இந்த பிரச்னை முடிவுக்கு வந்துவிடாது. இது மேலும் தொடரக்கூடும். என அவர் சொன்னார்.
இங்குள்ள தெலுக் புலாய் மண்டபத்தில் நடைபெற்ற இலவச கோவிட்-19 பரிசோதனை இயக்கத்தை பார்வையிட்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
ஜூன் மாதம் முதல் தேதி தொடங்கி 14 ஆம் தேதி வரை நாட்டில் சமூக மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் முற்றாக மூடப்படுவதாக அரசாங்கம் நேற்று அறிவித்திருந்தது.


