ஷா ஆலம், மே 29- நாடு முழுவதும் 24 நோன்பு பெருநாள் தொற்று மையங்களை சுகாதார அமைச்சு கண்டறிந்துள்ளது. இம்மையங்கள் மூலம் 850 பேர் கோவிட்-19 நோய்த் தொற்றுக்கு இலக்கானது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த வியாழக்கிழமை வரை அடையாளம் காணப்பட்ட எண்ணிக்கை இதுவாகும் என்று பாதுகாப்புக்கான முதன்மை அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கூறினார்.
இதில் கவலையளிக்கும் விஷயம் என்னவென்றால் நோய்த் தொற்றுக்கு உள்ளானவர்களில் 699 பேர் பாதிப்புக்கான எந்த அறிகுறியையும் கொண்டிருக்கவில்லை என்று அவர் சொன்னார்.
இந்த தொற்று மையங்களை உள்ளடக்கிய 3,309 பேரிடம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் அவர்களில் 850 பேர் இந்நோய்த் தொற்றினைக் கொண்டிருப்பது கண்டறியப்பட்டது என்றார் அவர்.
நோய் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 151 பேர் மட்டுமே நோய்க்கான அறிகுறிகளைக் கொண்டிருந்தனர். மற்றவர்களுக்கு எந்த அறிகுறியும் இல்லை என்பதுதான் மிகவும் அச்சமூட்டும் விஷயமாக உள்ளது என்று அவர் தெரிவித்தார்.


