சுபாங், மே 28- நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட சமூகத்தை உருவாக்குவதற்கு ஏதுவாக கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தை சுயமாக மேற்கொள்வதற்குரிய சுதந்திரத்தை சிலாங்கூருக்கு வழங்கும்படி மத்திய அரசு வலியுறுத்தப்பட்டுள்ளது.
இலவச கோவிட்-19 பரிசோதனை இயக்கத்தை பெரிய அளவில் மேற்கொள்வதைப் போல் தடுப்பூசித் திட்டத்தையும் வெற்றிகரமாக மேற்கொள்ளும் ஆற்றல் மாநில அரசுக்கு உள்ளதாக கோத்தா டாமன்சாரா சட்டமன்ற உறுப்பினர் ஷாதிரி மன்சோர் கூறினார்.
இலவச கோவிட்-19 சோதனைகளை நடத்தி நோய்த் தொற்று உள்ளவர்களை நாம் தொடர்ந்து அடையாளம் காண்பதில் நமக்குள்ள ஆற்றலை கருத்தில் கொண்டு இந்த பரிந்துரையை மத்திய அரசு பரிசீலிக்கலாம் என அவர் சொன்னார்.
நோய்த் தொற்று அதிவேகத்தில் பரவி வரும் நிலையில் தடுப்பூசியை விரைந்து பெறுவதில் பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருவதாக இங்குள்ள சுபாங் பெஸ்தாரி எம்.பி.எஸ்.ஏ. மண்டபத்தில் நடைபெற்ற இலவச கோவிட்-19 பரிசோதனை இயக்கத்தை பார்வையிட்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
சிலாங்கூர் மாநில மக்களுக்காக 25 லட்சம் தடுப்பூசிகளை வாங்கும் திட்டம் அடுத்த மாதம் இறுதி செய்யப்படும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கடந்த 19ஆம் தேதி கூறியிருந்தார்.
இந்த தடுப்பூசி மாநில மக்களுக்கு இலவசமாக வழங்கும் வேளையில் அடிப்படை விலையில் முதலாளிகளுக்கு விற்கப்படும் என அவர் தெரிவித்தார்.


