ஷா ஆலம், மே 28- வரும் ஜூன் மாதம் முதல் தேதி தொடங்கி இரு வாரங்களுக்கு முதல் கட்டமாக சமூக மற்றும் பொருளாதார நடவடிக்கைகளை முழுமையாக மூடும் திட்டத்தை அரசாங்கம் அமல்படுத்தவிருக்கிறது.
பிரதமர் டான்ஸ்ரீ மொகிடின் யாசின் தலைமையில் இன்று நடைபெற்ற சிறப்பு தேசிய பாதுகாப்பு மன்றக் கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டது.
தேசிய பாதுகாப்பு மன்றத்தினால் பட்டியலிடப்படும் அத்தியாவசிய பொருளாதார மற்றும் சேவைத் துறைகள் தவிர்த்து இதர அனைத்து துறைகளும் அக்காலக்கட்டத்தில் செயல்பட அனுமதிக்கப்படாது பிரதமர் துறை வெளியிட்ட அறிக்கை ஒன்று கூறியது.
எட்டாயிரத்திற்கும் மேல் பதிவாகும் தினசரி கோவிட-19 நேர்வுகள், இன்னும் தீவிரமாக இருக்கும் சுமார் 70,000 நோய்த் தொற்று சம்பவங்கள் மற்றும் அதிகரித்து வரும் மரண எண்ணிக்கை ஆகியவற்றை கருத்தில் கொண்டு இம்முடிவு எடுக்கப்பட்டதாக அந்த அறிக்கை தெரிவித்தது.
ஆபத்து மிகந்த புதிய வகை நோய்த் தொற்று காரணமாக பாதிப்புக்கு ஆளாவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதையும் அது சுட்டிக்காட்டியது.
இந்த இரு வார காலத்தில் நோய்த் தொற்று குறையும் பட்சத்தில் சில துறைகளை மீண்டும் திறக்க வகை செய்யும் இரண்டாம் கட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமல் செய்யப்படலாம் என்றும் பிரதமர் துறை கோடி காட்டியுள்ளது.
இரண்டாம் கட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை நான்கு வார காலத்திற்கு அமலில் இருக்கும். மூன்றாம் கட்டமாக தற்போது அமலில் இருக்கும் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை மீண்டும் செயல்படுத்தப்படும் எனவும் அது தெரிவித்தது.


