புத்ரா ஜெயா, மே 28- வரும் மூன்றாம் காலாண்டில் மலேசியா 2 கோடியே 56 லட்சம் பைசர்-பயோஎன்டெக் தடுப்பூசிகளை பெறும் என்று தேசிய கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்திற்கான ஒருங்கிணைப்பு அமைச்சர் கைரி ஜமாலுடின் கூறினார்.
கூடுதலாக 1 கோடியே 28 லட்சம் தடுப்பூசிகளைப் பெறுவது தொடர்பில் சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஆடாம் பாபாவுக்கும் தடுப்பூசி உற்பத்தி நிறுவனத்திற்கும் இடையே கடந்த 21ஆம் தேதி ஒப்பந்தம் கையெழுத்தானதன் அடிப்படையில் அதிகளவில் தடுப்பூசி பெறுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக அவர் சொன்னார்.
இந்த ஒப்பந்தத்தின் வழி நாம் அளிப்பாணை அளித்துள்ள பைசர் தடுப்பூசியின் எண்ணிக்கை 4 கோடியே 48 லட்சமாக அதிகரித்துள்ளது. நாட்டு மக்களில் 70 விழுக்காட்டினருக்கு இந்த தடுப்பூசி போதுமானதாகும் என்றார் அவர்.
வரும் ஜூன் மாதத்தில் மட்டும் 22 லட்சம் பைசர்-பயோஎன்டெக் தடுப்பூசிகளை நாம் பெறவுள்ளோம். அதனைத் தொடர்ந்து வாரம் 444,600 தடுப்பூசிகள் வீதம் ஐந்து வாரங்களுக்கு தொடர்ச்சியாக தடுப்பூசிகள் நமக்கு அனுப்பப்படும் என அவர் சொன்னார்.
சைனோவேக் பயோடெக் மற்றும் பார்மா நியாகா நிறுவனங்களுக்கிடையே ஆகக்கடைசியாக நடத்தப்பட்ட பேச்சுக்களின் பலனாக மொத்தம் 1கோடியே 20 லட்சம் தடுப்பூசியை வரும் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் சீனாவிலிருந்து முழுமையாக தருவிப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டார்.
அஸ்ட்ராஸேனேகா தடுப்பூசியைப் பொறுத்த வரை ஜூன் மாதம் 610,000 தடுப்பூசிகளையும் ஜூலை மாதம் 410,000 தடுப்பூசிகளையும் பெறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. எனினும் தேசிய மருந்தக ஒழுங்கு முறை அமைப்பின் அனுமதியைப் பொறுத்தே இதன் தொடர்பில் முடிவெடுக்கப்படும் என்றார் அவர்.
பெறப்படும் தடுப்பூசிகளின் எண்ணிக்கை அடிப்படையில் நாளொன்றுக்கு ஒன்றரை லட்சம் பேருக்கு தடுப்பூசியைச் செலுத்த முடியும் என நம்புகிறோம் என அவர் மேலும் தெரிவித்தார்.


