ஷா ஆலம், மே 27- கோவிட்-19 நோய்த் தொற்று தொடர்பான குற்றங்களுக்கு அபராதம் விதிப்பதில் கடைபிடிக்கப்படும் இரட்டைப் போக்கு அரசாங்கம் மீதான மக்களின் நம்பிக்கையைச் சிதைத்து விடும் என்று எதிர்க்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
மக்கள் அறவே நம்பிக்கையை இழந்து விட்டார்கள். நான் செல்வம் படைத்த பிரபல நட்சத்திரமாக இருந்தால் எனக்கான தண்டனை வேறு மாதிரி இருக்கும். நான் முக்கிய பிரமுகராகவோ டான்ஸ்ரீயாகவோ இருந்தால் தண்டனை மாறுப்பட்டிருக்கும். நான் விவசாயியாகவோ மீனவராகவோ இருந்தால் எனக்கு உடனடியாக தண்டனை கிடைத்து விடும். இந்த அவல நிலை மாற வேண்டும் என அவர் சொன்னார்.
இத்தகைய செயல்களால் அரசாங்கம் மீது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கை சரிந்து வருகிறது என்றார் அவர்.
நேற்று இங்கு இணையம் வாயிலாக நடைபெற்ற கோவிட்-19 நோய்த் தொற்றுக்கு பிந்தைய வியூகம் எனும் தலைப்பிலான நிகழ்ச்சியைத் தொடக்கி வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
ஆட்சியாளர்கள் இலக்கின்றி செயல்படுவது போலவும் மக்களின் நம்பிக்கையை பெறுவதற்கான எந்த முயற்சியிலும் ஈடுபடாதது போலவும் தோன்றுவதால் மக்கள் பொறுமையின் எல்லைக்கே சென்று விட்டனர் என்று போர்ட்டிக்சன் நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் கூறினார்.
மக்களுக்கு எப்போதும் நம்பிக்கையை கொடுப்பது அரசாங்கத்தின் கடமையாக இருக்க வேண்டும். ஆனால் நம் கண் முன்னே நடப்பது எல்லாம் மனதுக்கு சங்கடத்தை கொடுக்கிறது என அவர் மேலும் சொன்னார்.


