கோலாலம்பூர், மே 27- உள்நாட்டினர் தலைமையில் செயல்பட்டு வந்த போதைப் பொருள் கடத்தல் கும்பலை கோலாலம்பூர் போலீசார் முறியடித்துள்ளனர்.
நலைநகர் மற்றும் சுபாங் ஜெயாவில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில் அக்கும்பலைச் சேர்ந்த ஐவரை கைது செய்த போலீசார் 398,600 வெள்ளி மதிப்பிலான பல்வேறு வகை போதைப் பொருள்களையும் கைப்பற்றினர்.
கடந்த ஞாயிறு மாலை தாமான் ஓவர்சீர்ஸ் யூனியன் கார்டன் மற்றும் பழைய கிள்ளான் சாலையில் உள்ள ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பில் அதிரடி சோதனை மேற்கொண்ட போலீசார் இரு உள்நாட்டினர் மற்றும் இரு வியட்னாம் ஆடவர்களை கைது செய்ததாக கோலாலம்பூர் போதைப் பொருள் தடுப்பு பிரிவின் ஏசிபி அட்னான் அசிசோன் கூறினார்.
பெரேடுவா மைவி ரக க் கார் மற்றும் அவ்வாடவர்கள் தங்கியிருந்த வாடகை வீட்டை சோதனையிட்ட போது அங்கு 1,280.63 கிராம் எம்.டி.எம்.ஏ பவுடர் மற்றும் பத்தாயிரம் எரிமின் போதை மாத்திரைகள் கண்டு பிடிக்கப்பட்டதாக அவர் சொன்னார்.
21 முதல் 38 வயது வரையிலான அந்த ஆடவர்களிடமிருந்து 3,200 வெள்ளி மதிப்பிலான பல்வேறு தங்க நகைகளும கைப்பற்றப்பட்டன என்று நேற்று இங்கு வெளியிட்ட அறிக்கை ஒன்றில் அவர் சொன்னார்.
சுபாங் ஜெயாவிலுள்ள ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பில் மேற்கொள்ளப்பட்ட மற்றொரு சோதனையில் எம்.டி.எம்.ஏ. பவுடர், எரிமின் போதை மாத்திரைகள் மற்றும் 10,600 வெள்ளி ரொக்கம் கைப்பற்றப்பட்டன என்றும் அவர் குறிப்பிட்டார்.


