சுங்கை பூலோ, மே 26- சிலாங்கூர் மாநில அரசினால் மேற்கொள்ளப்படும் இலவச கோவிட்-19 பரிசோதனை இயக்கத்தில் பங்கு கொள்வோரில் சுமார் 40 விழுக்காட்டினர் சிறார்கள் மற்றும் குழந்தைகளாவர்.
தங்களின் பிள்ளைகளின் உடல் நலம் மீது பெற்றோர்கள் கொண்டுள்ள அக்கறையை இந்த எண்ணிக்கை பிரதிபலிக்கிறது என்று செல்கேட் கார்ப்ரேஷன் சென். பெர்ஹாட் நிறுவனத்தின் சந்தை மற்றும் தொடர்பு பிரிவு அதிகாரி நோராபிடா ஜம்ரி கூறினார்.
சிறார்கள் நோய்த் தொற்று அபாயத்திற்குள்ளாவதை தவிர்க்கும் நோக்கில் அவர்களுக்காக சிறப்பு தடங்களை பரிசோதனை மையங்களில் தாங்கள் ஏற்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
பதிவு செய்வது உள்பட அனைத்து விதமான உதவிகளையும் சிறார்களுடன் வரும் பெற்றோர்களுக்கு செய்து தரப்படுவதாக இங்குள்ள பாயா ஜெராஸ் எம்.பி.எஸ்.ஏ. மண்டபத்தில் நடைபெற்ற இலவச கோவிட்-19 பரிசோதனை இயக்கத்தின் போது அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.
சிறார்கள் நோய்த் தாக்கத்திற்குள்ளாகும் அபாயம் அதிகம் கொண்டவர்களாக உள்ளதால் அவர்களை இத்தகைய பரிசோதனை இயக்கங்களுக்கு பெற்றோர்கள் கொண்டு வருவதை தாங்கள் ஊக்குவிப்பதாகவும் அவர் சொன்னார்.
கோவிட்-19 நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களில் 6,290 பேர் 18 மாதங்களுக்கும் குறைவான குழந்தைகள் என பாதுகாப்புக்கான முதன்மை அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் நேற்று கூறியிருந்தார்.


