கோலாலம்பூர், மே 26- கோவிட்19 தடுப்பூசியை முன்கூட்டியே பெறுவதற்கு நாட்டிலுள்ள சுமார் 6,000 ஊடகவியலாளர்கள் மேற்கொண்ட முயற்சிக்கு பலன் கிட்டியுள்ளது.
ஊடகவியலாளர்களுக்கும் தடுப்பூசி வழங்குவது தொடர்பான அறிவிப்பை தேசிய கோவிட்-19 தடுப்பூசித் திட்ட ஒருங்கிணைப்பு அமைச்சர் கைரி ஜமாலுடின் நேற்று வெளியிட்டுள்ளார்.
நோய்த் தொற்றுத் தடுப்பதில் நேரம் காலம் பாராது உழைத்து வரும் ஊடகவியாளர்களையும் முன்களப் பணியாளர்களாக அரசாங்கம் அங்கீகரித்துள்ளதை இந்த அறிவிப்பு புலப்படுத்துகிறது.
ஊடகவியலாளர்கள் முன்கூட்டியே தடுப்பூசியைப் பெறுவதை உறுதி செய்வதற்காக கடும் போராட்டம் நடத்தியவர்களில் தேசிய பத்திரிகையாளரான டான்ஸ்ரீ ஜோஹான் ஜாபரின் பங்கு அளப்பரியது.
‘செய்தியாளர்கள் இன்னும் முன் களப்பணியாளர்கள் இல்லையா?‘ எனும் தலைப்பில் ஆங்கில நாளேடுகளில் அமைச்சர் கைரி ஜமாலுடினுக்கு அவர் திறந்த மடல் எழுதியிருந்தார்.
மற்ற முன் களப்பணியாளர்களைப் போலவே பத்திரிகையாளர்களும் கடந்த ஓராண்டு காலமாக கோவிட்-19 பெருந்தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் தங்கள் பங்களிப்பை வழங்கி வருவதையும் அவர் தமது கடிதத்தில் சுட்டிக்காட்டியிருந்தார்.
நாட்டிலுள்ள 114 பதிவு பெற்ற ஊடகங்களைச் சேர்ந்த 5,876 பத்திரிகையாளர்கள் விரைவில் கோவிட்-19 தடுப்பூசியைப் பெறுவர் என்று நேற்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அமைச்சர் கைரி கூறியிருந்தார்.


