சுங்கை பூலோ, மே 26- பாயா ஜெராஸ் எம்.பி.எஸ்.ஏ. மண்டபத்தில் இன்று நடைபெற்ற இலவச கோவிட்-19 பரிசோதனை இயக்கத்தில் மூவாயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
நோய்த் தொற்றுக்கு எதிராக பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள விழிப்புணர்வை இந்த எண்ணிக்கை உயர்வு காட்டுவதாக பாயா ஜெராஸ் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் முகமது கைருடின் ஓத்மான் கூறினார்.
நேற்று செலங்கா செயலி வாயிலாக 2,700 பேர் இந்த பரிசோதனை இயக்கத்தில் பங்கு கொள்வதற்கு முன்பதிவு செய்திருந்தனர். இன்று பொது விடுமுறை என்பதால் காலை தொடங்கி அதிக எண்ணிக்கையிலானோர் மண்டபத்திற்கு நேரில் வரத் தொடங்கினர் என்றார் அவர்.
பரிசோதனை இயக்கம் சீராக நடைபெறுவதற்கு ஏதுவாக ஆறு முகப்பிடங்கள் திறக்கப்பட்டுள்ளன. அவற்றில் இரண்டு முகப்பிடங்கள் கர்ப்பிணி பெண்கள், மூத்த குடிமக்கள் மற்றும் சிறார்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்..
பரிசோதனையில் பங்கேற்க காத்திருக்கும் பொதுமக்களுக்கு வழங்குவதற்காக ரொட்டி மற்றும் நீர் அடங்கிய 3,500 பொட்டலங்கள் தயார் செய்யப்பட்டிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
பாயா ஜெராஸ் தவிர்த்து, டாமன்சாரா டாமாய் தொகுதியிலும் இத்தகைய இலவச கோவிட்-19 இயக்கம் இன்று நடத்தப்படுகிறது.


