ஷா ஆலம், மே 26- மூன்றாம் கட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைக்கான எஸ்.ஒ.பி. நிபந்தனைகள் கடுமையாகக்கப்பட்டுள்ளதை தாம் பெரிதும் வரவேற்பதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
வரும் ஜூன் மாதம் 7ஆம் தேதி வரை அமலில் இருக்கும் இந்த நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை நோய்த் தொற்றைக் குறைப்பதில் ஆக்ககரமான பலனைத் தராது போனால் கடந்தாண்டு அமல்படுத்தப்பட்டதைப் போல் முழு அளவிலான பொது முடக்கம் அமல் செய்யப்படுவதற்கான சாத்தியம் உள்ளதாக அவர் சொன்னார்.
நாம் இப்போது முதற்கொண்டு அதற்கான தயார் நிலையில் இருக்க வேண்டும். முழு அளவிலான நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் அமலாக்கத்தை சிலாங்கூர் எதிர்க்கவில்லை. எனினும், எத்தகைய சூழலையும் எதிர்கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டும் என்றார் அவர்.
சில நோய்த் தொற்றிலிருந்து தப்பி உணவு பற்றாக்குறைய காரணமாக பட்டினியால் சாக நிலை ஏற்படுகிறது. ஆகவே, நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமலாக்கத்தில் அரசாங்கம் நமது கருத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.
இங்குள்ள ஐ.டி.சி.சி. மாநாட்டு மையத்தில் செயல்பட்டு வரும் கோவிட்-19 தடுப்பூசி மையத்திற்கு வருகை புரிந்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
நேற்று தொடங்கி அடுத்த மாதம் 7ஆம் தேதி வரை அரசாங்கம் மூன்றாம் கட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை அமல் செய்துள்ளது. தொழிலாளர்கள் வீட்டிலிருந்து வேலை செய்வதை ஊக்குவிப்பது மற்றும் வர்த்தக நேரத்தைக் குறைப்பது ஆகிய இரு வியூகங்களின் அடிப்படையில் இந்த நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமல்படுத்தப்பட்டுள்ளது.


