சுபாங் ஜெயா, மே 24- சிலாங்கூர் மாநிலத்தில் இதுவரை 16 சட்டமன்றத் தொகுதிகளில் நடத்தப்பட்ட இலவச கோவிட்-19 பரிசோதனையில் 1,353 பேரிடம் அந்நோய்க்கான சாத்தியம் இருப்பது கண்டறியப் பட்டுள்ளது.
நோய்த் தொற்று கண்டறியப் பட்டவர்களில் சுமார் 70 விழுக்காட்டினர் 18 வயது முதல் 40 வயது வரையிலானவர்கள் என்று கிளினிக் செல்கேர் நிர்வாகி முகமது நோர் முகமது நாசீர் கூறினார்.
நேற்று வரை ஆண்டிஜென் (ஆர்.டி.கே.-ஏசி) உபகரணம் மூலம் 24,331 பேரிடம் கோவிட்-19 சோதனை நடத்தப்பட்டது.அதிகமான இளைஞர்கள் மத்தியில் நோய்த் தொற்று இருப்பது இதன் மூலம் கண்டறியப்பட்டது என்றார் அவர்.
இங்குள்ள யுஎஸ்ஜெ 1 விளையாட்டு வளாகத்தில் நடைபெற்ற கோவிட்-19 பரிசோதனை இயக்கத்தின் போது செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
இதனிடையே, இந்த இலவச கோவிட்-19 பரிசோதனை இயக்கத்தில் பங்கு கொள்ள சமார் 12,000 பேர் செலங்கா செயலி வாயிலாக முன்பதிவு செய்திருந்தது குறித்து தாங்கள் மனநிறைவு கொள்வதாக அவர் சொன்னார்.


