கோலாலம்பூர், மே 22- நாட்டில் மருத்துவத் துறைக்குத் தேவையான ஆக்சிஜன் கையிருப்பு தற்போதைக்கு போதுமான அளவு உள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஆடாம் பாபா கூறினார்.
உடனடித் தேவைக்குப் பயன்படுத்துவதற்கு ஏதுவாக 20,000 மருத்துவ ஆக்சிஜன் சிலிண்டர்கள் தயார் நிலையில் உள்ளதோடு நடப்பு தேவையை விட ஐந்து மடங்கு அதிகமான திரவமய ஆக்சிஜனை விநியோகிக்கும் ஆற்றலை விநியோகிப்பாளர்கள் கொண்டுள்ளதாக அவர் சொன்னார்.
கோவிட்-19 நோய்ப்பரவல் திடீரென அதிகரித்த காரணத்தால் மருத்துவ ஆக்சிஜனுக்கான தேவை அபரிமிதமாக அதிகரித்து விட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மருத்துவ ஆக்சிஜன் கையிருப்பு எப்போதும் போதுமான அளவு இருப்பதை உறுதி செய்ய சுகாதார அமைச்சின் அதிகாரிகள் ஆக்சிஜன் விநியோகிப்பாளர்களுடன் எப்போதும் தொடர்பில் இருந்து வருவதாகவும் அவர் கூறினார்.
எதிர்பாராத வகையில் ஆக்சிஜனுக்கான தேவை அதிகரிக்கும் பட்சத்தில் 500,000 சிலிண்டர் தொழில்துறைக்கான ஆக்சிஜனை குறுகிய காலக்கட்டத்தில் மருத்துவ தேவைக்கான ஆக்சிஜனாக மாற்றும் வல்லமையை விநியோகிப்பாளர்கள் கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


