கோம்பாக், மே 19- கோவிட்-19 தடுப்பூசிகளை மாநிலத்திலுள்ள முதலாளிகளுக்கு விற்பதன் மூலம் பெரும் லாபம் ஈட்ட முயல்வதாக எழுந்துள்ள குற்றச்சாட்டை சிலாங்கூர் அரசு மறுத்துள்ளது.
மாநில அரசின் நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் பரப்பப்படும் அரைவேக்காட்டுத்தனமான செய்தி அதுவாகும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
தடுப்பூசி தொடர்பான முழுமையான திட்டத்தை தாக்கல் செய்வோம் என நான் முன்னதாகவே கூறிவிட்டேன். அனைத்து தடுப்பூசிகளையும் முதலாளிகளிடம் விற்றுவிட மாட்டோம். மக்களுக்கு தேவையான தடுப்பூசிகளையும் தயார் படுத்திவைப்போம் என்றார் அவர்.
மத்திய அரசு முன்னதாக அறிவித்த தேசிய கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தை முழுமை பெறச் செய்வதற்கு மாநில அரசு சொந்தமாக தடுப்பூசிகளை வாங்குகிறது என்று அவர் விளக்கினார்.
கோம்பாக் டேவான் பிரிங்கின் மற்றும் சுங்கை துவா டேவான் ஸ்ரீ சியாந்தானில் நடைபெறும் இலவச கோவிட்-19 பரிசோதனை இயக்கத்தை பார்வையிட்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
மாநில அரசிடமிருந்து கோவிட்-19 தடுப்பூசிகளை வாங்க விரும்பும் முதலாளிகள் செலங்கா செயலி வாயிலாக முன்பதிவு செய்து கொள்ளலாம் என மாநில அரசு முன்னதாக அறிவித்திருந்தது.
எனினும், எந்த வகையான தடுப்பூசி வழங்கப்படும் என்றத் தகவலை மாநில அரசு தெரிவிக்கவில்லை.
கோவிட்-19 நோய்த் தொற்றை தடுக்கும் விதமாக மாநில மக்களுக்காக முப்பது லட்சம் முதல் ஐம்பது லட்சம் தடுப்பூசிகளை வாங்க மாநில அரசு முடிவெடுத்துள்ளது. இந்நோக்கத்திற்காக அது 10 கோடி வெள்ளியை ஒதுக்கீடு செய்துள்ளது.


