ஷா ஆலம், மே 19- கோவிட்-19 பெருந் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக சிலாங்கூர் அரசு மேற்கொண்டு வரும் பல்வேறு நடவடிக்கைகளில் இலவச கோவிட்-19 பரிசோதனை இயக்கமும் அடங்கும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
இது தவிர, செலங்கா செயலி அறிமுகம், சிலாங்கூர் மாநில கோவிட்-19 தடுப்பு பணிக்குழு உருவாக்கம் மற்றும் பொருளாதார மீட்சித் திட்டம் ஆகியவை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன என்று அவர் சொன்னார்.
சிலாங்கூர் மாநிலத்தில் நோய்த் தொற்று அதிகமாக இருப்பதை மறுப்பதற்கில்லை. எனினும், இலவச கோவிட்-19 பரிசோதனை இயக்கங்களின் வாயிலாக நோய் பரவல் விகிதம் தேசிய அளவை விட குறைவாகவே உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது என்றார் அவர்.
பல்வேறு தடைகள் ஏற்பட்டாலும் கோவிட்-19 நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்துவதில் மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது என்று டிவிட்டர் வழி அவர் குறிப்பிட்டார்.
இலவச கோவிட்-19 பரிசோதனை இயக்கத்தில் தவறாது பங்கு கொள்ளும்படி பொதுமக்களை அவர் கேட்டுக் கொண்டார்.


