கோம்பாக், மே 19- சிலாங்கூர் மாநில அரசின் இலவச கோவிட்-19 பரிசோதனை இயக்கத்தில் பங்கேற்போரின் எண்ணிக்கை நோன்பு பெருநாள் விடுமுறைக்குப் பின்னர் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாநிலத்தில் கோவிட்-19 பெருந்தொற்றின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் அந்நோய்க்கு எதிரான விழிப்புணர்வு பொதுமக்கள் மத்தியில் அதிகரித்து வருவதை இந்த எண்ணிக்கை உயர்வு புலப்படுத்துகிறது என்று கிளினிக் செல்கேர் நிர்வாகி முகமது நோர் முகமது நாசீர் கூறினார்.
முன்பு நாங்கள் இலக்கு நிர்ணயித்தபடி 1,000 பேர் வரை இந்த இலவச பரிசோதனையில் கலந்து கொள்வர். சில சமயங்களில் இந்த எண்ணிக்கை 1,600 வரை உயரும்.
ஆனால், நோன்பு பெருநாள் முடிந்தப் பின்னர் தொடக்கிய இந்த பரிசோதனை இயக்கத்தில் உலுகிளாங்கில் 2,240 பேரும் புக்கிட் அந்தாரா பங்சாவில் 1,700 பேரும் பங்கேற்பதற்கு பதிவு செய்துள்ளனர் என்றார் அவர்.
தாங்கள் கோவிட்-19 நோய்த் தொற்றிலிருந்து விடுபட்டிருப்பதை உறுதி செய்ய பொதுமக்கள் இந்த இலவச கோவிட்-19 பரிசோதனை இயக்கத்தை முறையாகப் பயன்படுத்திக் கொள்வர் எனத் தாம் பெரிதும எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இம்மாதம் 8ஆம் தேதி முதல் அடுத்த மாதம் 10ஆம் தேதி வரை தினசரி இரு தொகுதிகள் வீதம் மாநிலம முழுவதும் உள்ள 56 தொகுதிகளிலும் இலவச கோவிட்-19 பரிசோதனை இயக்கத்தை மேற்கொள்ள மாநில அரசு திட்டமிட்டுள்ளது.


