ஷா ஆலம், மே 19- தாமான் மேடான் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சம்சுல் பிர்டாவுஸ் முகமது சுப்ரிக்கு கோவிட்-19 நோய்த் தொற்று பீடித்திருப்பது இன்று உறுதி செய்யப்பட்டது.
நேற்று மேற்கொண்ட கோவிட்-19 பரிசோதனையில் தன் குடும்ப உறுப்பினர்களுக்கும் இந்நோய்த் தொற்று கண்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
நோன்பு பெருநாள் விடுமுறையின் போது எனக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. காய்ச்சல், இருமல் மற்றும் சளியால் அவதியுற்றேன். இப்போது நிலைமை ஓரளவு சீராக உள்ளது என்று மலேசியா கினி இணைய ஊடகத்திடம் அவர் தெரிவித்தார்.
தன் குடும்பத்தில் உள்ள மனைவி, மாமியார் மற்றும் இரு பிள்ளைகளுக்கும் நோய்த் தொற்று கண்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறிய அவர், தற்போது தாங்கள் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகச் சொன்னார்.
தேசிய கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தின் கீழ் தடுப்பூசி பெற்ற சட்டமன்ற உறுப்பினர்களில் தாமும் ஒருவர் என்பதையும் அவர் உறுதிப்படுத்தினார்.
பைசர் பயோஎன்டெக் தடுப்பூசியின் முதல் டோஸ் மருந்தளவை மார்ச் 10ஆம் தேதியும் இரண்டாவது டோஸ் மருந்தளவை மார்ச் 31ஆம் தேதியும் தாம் பெற்றதாக அவர் கூறினார்.
தடுப்பூசி பெற்றப் பின்னரும் எஸ்.ஒ.பி. விதிமுறைகளை முறையாக கடைபிடித்து வர வேண்டும் என்று சுகாதார அமைச்சின் தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறியிருந்தார்.


