ஷா ஆலம் மே 18;- நேற்று தனது தலைமையில் நடைபெற்ற சிலாங்கூர் மாநில பாதுகாப்பு மன்றத்தின் சிறப்புக் கூட்டத்தில் மாநிலத்தில் கோவிட்-19 நோய்த் தொற்றை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அதிகரிப்பது தொடர்பில் சில முடிவுகள் எடுக்கப்பட்டதாக சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
சி.ஏ,சி.எனப்படும் கோவிட் மதிப்பீட்டு மையத்தின் நடவடிக்கைகளை சீராக மேற்கொள்வதற்கு ஏதுவாக அரசு ஊழியர்கள், ஊராட்சி மன்ற அமலாக்க அதிகாரிகள், செல்கேர் மருத்துவப் பணியாளர்கள், தனியார் மருத்துவ பல்கலைக்கழக மாணவர்கள் ஆகியோரை உள்ளடக்கிய 150 பேர் கொண்ட தன்னார்வலர் குழுவை உருவாக்க மாநில அரசு இணக்கம் தெரிவித்துள்ளது.
இந்நடவடிக்கையின் மூலம் மெலாவத்தி அரங்கில் செயல்பட்டு வரும் பெட்டாலிங் மாவட்டத்திற்கான சி.ஏ,சி. மையத்தின் பணிகள் சீராக நடைபெறுவதை உறுதி செய்ய முடியும்.மேலும், இந்த கூடுதல் தன்னார்வலர்களின் பங்களிப்பின் வாயிலாக போக்குவரத்து நிர்வாகம், நோயாளிகள் மேலாண்மை மற்றும் நோயாளிகளை மதிப்பீடு செய்வது ஆகிய பணிகளை எளிதாக்க முடியும்.
இது தவிர்த்து மருத்துவ தன்னார்வலர்களால் நடத்தப்படும் ‘அழைப்பு மையம்‘ ஒன்றை உருவாக்கவும் மாநில அரசு இணக்கம் தெரிவித்துள்ளது. வீடுகளில் உள்ள நோயாளிகளை மதிப்பீடு செய்வதில் ஏற்படும் சுமையைக் குறைக்கும் நோக்கில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
மெலாவத்தி அரங்கிலுள்ள சி.ஏ.சி. மையத்திற்கு வருவோரில் 48 விழுக்காட்டினர் தனிமைப்படுத்தும் நோக்கத்திற்காக அணிவிக்கப்பட்ட வில்லைகளை அகற்றுவதற்காக அல்லது வீடுகளில் தனிமைப்படுத்தப்படுத்தும் காலக் கெடுவை முடிவுக்கு கொண்டு வருவதற்காக வந்தவர்களாவர்.
ஆகவே, அடுத்த வாரம் தொடங்கி கைகளில் பொருத்தப்பட்ட வில்லைகளை அகற்றுவதற்கும் தனிமைப்படுத்தும் காலத்தை முடிவுக்கு கொண்டு வரும் பணிகளை மேற்கொள்வதற்கும் ஏதுவாக சிறப்பு முகப்பிடங்கள் திறக்கப்படும். மெலாவத்தி அரங்கில் உள்ள சி.ஏ.சி. மையத்தில் ஜன நெரிசலை தவிர்ப்பதற்கும் தனிமைப்படுத்தும் காலம் முடிவு வந்தவர்கள் மத்தியில் நோய்த் தொற்று மீண்டும் ஏற்படாமலிருப்பதை உறுதி செய்வதற்கும் ஏதுவாக இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
மூன்றாவதாக பரிந்துரைக்கப்பட்ட திட்டம் என்னவென்றால் தனியார் கிளினிக்குகளை உள்ளடக்கிய சி.ஏ,சி. மைய உருவாக்கமாகும். இத்திட்டத்தின் கீழ் மருத்துவர்களுக்கு வீட்டு கண்காணிப்பு உத்தரவை மேற்கொள்ளும் அதிகாரம் வழங்கப்படும்.இதன் வழி கோவிட்-19 நோய்த் தொற்று கண்டவர்களுக்கு கைகளில் வில்லைகளை அணிவிக்கும் அதிகாரம் இந்த மருத்துவ துறையை சார்ந்தவர்களுக்கு வழங்கப்படும்.
இந்த வீட்டு கண்காணிப்பு உத்தரவை மேற்கொள்ள சிலாங்கூர் மாநிலத்திலுள்ள 65 பொது மருத்துவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த தனியார் சி.ஏ.சி. குறித்த முழு விவரங்கள் பின்னர் வெளியிடப்படும்.
சிலாங்கூர் மாநிலத்தில் கோவிட்-19 நோயாளிகளுக்கு தீவிர சிசிச்சைப் பிரிவுக்கான உபகரணங்கள் மற்றும் கட்டில்கள் அதிகரிக்கப்படும் தகவலையும் மாநில சுகாதாரத்துறை என்னிடம் தெரிவித்துள்ளது என்றார் அவர்.
சுமார் 300 கட்டில்களும் தீவிர சிகிச்சைப் பிரிவு வசதிகளும் அதிகரிக்கப்படும். அதே சமயம் செர்டாங், மேப்ஸ் மையத்தில் 1,300 மேலும் அதிகரிக்கப்படும்.
பெட்டாலிங் மாவட்ட சி.ஏ.சி. மையத்தில் 20 தற்காலிக கூடாரங்கள், மின்விசிறிகள், நாற்காலிகள், ஒலி பெருக்கிகள் போன்ற வசதிகள் நேற்று முதல் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
நாட்டின் இதர மாநிலங்களிலும் கோவிட்-19 தனிமைப்படுத்துதல் மற்றும் சிகிச்சை மையங்கள் (பி.கே.ஆர்.சி.) உருவாக்கப்படவுள்ளதால் செர்டாங் மேப்ஸ். வளாகத்திலுள்ள உள்ள பி.கே.ஆர்.சி. மையம் சிலாங்கூர் மற்றும் கூட்டரசு பிரதேச நோயாளிகளுக்கு மட்டும் பிரத்தியேகமாக சிகிச்சை அளிக்கும் மையமாக செயல்படும்.
சிலாங்கூர் மாநிலத்தில் கோவிட்-19 நிலவரத்தை மாநில அரசு தொடர்ந்து அணுக்கமாக கண்காணித்து வரும் என்பதோடு நோய்த் தொற்றை கட்டுப்படுத்துவதற்கு தன்னால் இயன்ற அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் என்றார் சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி.


