உலு கிளாங், மே 18- நோன்புப் பெருநாள் விடுமுறை முடிந்து கல்லூரி திரும்பும் உயர்கல்விக் கூட மாணவர்களுக்கு இலவச கோவிட்-19 பரிசோதனையை நடத்த தாங்கள் தயாராக உள்ளதாக கிளினிக் செல்கேர் கூறியுள்ளது.
நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து பல்கலைக்கழகத்தின் ஒரே வளாகத்தில் நுழையும் போது அம்மாணவர்களுக்கு நோய்த் தொற்று ஏற்படும் சாத்தியத்தை தவிர்க்கும் நோக்கில் இந்நடவடிக்கை எடுக்கப்படுவதாக கிளினிக் செல்கேர் நிர்வாகி முகமது நோர் முகமது நாசீர் கூறினார்.
சில மாணவர்கள் சிவப்பு மண்டலத்திலிருந்து வரக்கூடும். அவர்களிடம் கோவிட-19 பரிசோதனையை மேற்கொள்ளாது போனால் பிற மாணவர்களும் நோய்த் தொற்றினால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது என்று அவர் சொன்னார்.
எனினும், மாநில அரசின் உத்தரவு மற்றும் முடிவைப் பொறுத்தே இந்த பரிசோதனை இயக்கம் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
நோன்பு பெருநாளை கொண்டாடுவதற்காக சுமார் ஒரு லட்சம் மாணவர்கள் கடந்த 7ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் உயர்கல்விக் கூடங்களிலிருந்து வீடு திரும்பினர்.
அவர்கள் அனைவரும் இம்மாதம் 15 முதல் 20ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் மீண்டும் தங்கள் கல்லூரிக்கு திரும்புகின்றனர்.


