கோலாலம்பூர், மே 18- நோயாளிகளிடம் எந்த அறிகுறியையும் கொண்டிராத புதிய வகை கோவிட்-19 நோய்த்தொற்று பரவல் அச்சத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளதாக சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.
சில சமயங்களில் நோயாளிகள் கடுமையான கட்டத்தை எட்டிய போதிலும் கோவிட்-19 தொடர்பான பரிசோதனைகளில் அவர்களுக்கு அந்நோய் இருப்பதற்கான எந்த அறிகுறியையும் காட்டுவதில்லை என்று அவர் சொன்னார்.
உருமாற்றம் கண்ட இத்தகைய கோவிட்-19 நோய்த் தொற்றுகள் விரைவாக பரவுவதோடு மரண எண்ணிக்கை அதிகரிப்பதற்கும் காரணமாக விளங்குவதாக அவர் தெரிவித்தார்.
இத்தகைய நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்ட பலர் இருமல் காய்ச்சல், உடல் பலவீனம், களைப்பு, உணவு மீது நாட்டமின்மை போன்ற எந்த அறிகுறியையும் கொண்டிருப்பதில்லை.
இது தவிர வழக்கமாக கோவிட்-19 நோயாளிகளுக்கு ஏற்படும் மணம் மற்றும் சுவையை உணர முடியாமல் போகும் நிலைகூட ஏற்படுவதில்லை. ஆயினும், நோய்த் தொற்று அவர்களின் நுரையீரலை வெகு வேகமாகச் சென்று தாக்கி விடுகிறது என்றார் அவர்.
நோயாளிகள் மீது மேற்கொள்ளப்படும் எக்ஸ்ரே சோதனையில் நுரையீரலில் பாதிப்பு தென்பட்டாலும் அவர்களில் பெரும்பாலோருக்கு காய்ச்சல் காண்பது கிடையாது என்றும் அவர் சொன்னார்.
இந்நோயின் தாக்கத்திலிருந்து விடுபடுவதற்கு ஏதுவாக சொந்தமாக நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை உருவாக்கிக் கொள்ளும் படி பொதுமக்களை அவர் கேட்டுக் கொண்டார்.


