ஷா ஆலம், மே 18- சிலாங்கூரில் முழுமையான நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை அமல் செய்வது தொடர்பான எந்த முடிவும் மாநில அரசுடன் விவாதிப்பது உள்பட பல்வேறு கட்டங்களுக்குப் பின்னரே அமல்படுத்தப்பட வேண்டும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
முழுமையான பொது முடக்கம் என்பது சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஆடாம் பாபாவின் கருத்தே தவிர இதன் தொடர்பில் எந்த இறுதி முடிவும் எடுக்கப்படவில்லை என்று அவர் சொன்னார்.
இவ்விவகாரம் தொடர்பில் தேசிய பாதுகாப்பு மன்றக் கூட்டத்தில் விவாதிக்கப்பட வேண்டும். இதில் மாநில அரசின் பங்கு என்ன? நாங்கள் மேற்கொள்ள வேண்டிய அடுத்தக் கட்ட நடவடிகைகள் யாவை போன்ற விபரங்கள் வரையறுக்கப்பட வேண்டும் என்றார் அவர்.
முழுமையான நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை அமல் செய்வது தொடர்பான பரிந்துரையை முன்வைக்கும் அதிகாரம் சுகாதார அமைச்சுக்கு உள்ளது. தங்களுக்கு கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் தேசிய பாதுகாப்பு மன்றம் முடிவு எடுக்கும். என்னைப் பொறுத்த வரை இந்த நடவடிக்கைகள் யாவும் இன்னும் பூர்வாங்க நிலையிலே உள்ளன என்று அவர் தெரிவித்தார்.
சிலாங்கூரில் கோவிட்-19 நோய்த் தொற்று சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு மாநிலத்தில் முழு அளவிலான நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை அமல் செய்வது குறித்து பரிசீலிக்கப்படுவதாக டத்தோஸ்ரீ அடாம் பாபா நேற்று கூறியிருந்தது தொடர்பில் அவர் இவ்வாறு கருத்துரைத்தார்.


