அம்பாங், மே 18- கோம்பாக் சட்டமன்றத் தொகுதியில் இன்று நடைபெறும் இலவச கோவிட்-19 பரிசோதனை இயக்கத்தில் சுமார் மூவாயிரம் பேர் பங்கேற்றுள்ளதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
இங்குள்ள டத்தோ அகமது ரசாலி மண்டபத்தில் நடைபெறும் இந்த பரிசோதனை இயக்கத்தில் பங்கு கொள்வதற்கு 1,100 பேர் செலங்கா செயலி வாயிலாக பதிவு செய்துள்ளதாக அவர் சொன்னார்.
செலங்கா செயலி வாயிலாக முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே 1,100 பேராகும். இதுதவிர்த்து மேலும் அதிக எண்ணிக்கையிலானோர் இந்த சோதனையில் பங்கு கொள்ள நேரடியாக மண்டபம் வருவர் என எதிர்பார்க்கிறோம் என்றார் அவர்.
அதேசமயம், உலு கிளாங், டேவான் செர்பகுணா எம்.பி.ஏ.ஜெ. ஏயு 2 மண்டபத்தில் நடைபெறும் சோதனையில் கோம்பாக்கை விட இரு மடங்கு அதிகமானோர் கலந்து கொண்டுள்ளதாக அறிகிறேன். கோவிட்-19 நோய்த் தொற்றுக்கு எதிராக பரிசோதனை செய்து கொள்வதில் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு அதிகரித்துள்ளதை இது காட்டுகிறது என்று அவர் சொன்னார்.
சிலாங்கூர் மாநில அரசின் ஏற்பாட்டில் கோம்பாக் மற்றும் உலு கிளாங்கில் நடைபெறும் இலவச கோவிட்-19 பரிசோதனை இயக்கத்தை பார்வையிட்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
இந்த இலவச பரிசோதனை இயக்கத்தின் வாயிலாக நோய்த் தொற்று கண்டவர்கள் குறித்த தெளிவான புள்ளிவிபரங்களைப் பெறவும் அவர்களை தனிமைப்படுத்தும் நடவடிக்கையை மேற்கொள்ளவும் இயலும் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.


