புத்ரா ஜெயா, மே 17- சிலாங்கூரில் முழு அளவிலான நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை அமல்படுத்துவது குறித்து சுகாதார அமைச்சு பரிசீலித்து வருகிறது.
இம்மாநிலத்தில் கோவிட்-19 நோய்த் தொற்றின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வந்தால் இந்நடவடிக்கையை எடுப்பது குறித்து தாங்கள் ஆராய்ந்து வருவதாக சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஆடாம் பாபா கூறினார்.
சிலாங்கூர் மாநிலத்தில் நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த முடியாத பட்சத்தில் கடுமையான நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகளை (எஸ்.ஒ.பி.) சுகாதார அமைச்சு அமல்படுத்த வேண்டி வரும் என்றார் அவர்.
கடுமையான எஸ்.ஒ.பி. விதிமுறைகளை மற்றும் பொது முடக்கத்தை அமல்படுத்துவது குறித்து பரிந்துரைக்கும் கட்டாயத்தில் உள்ளோம். அதையும் மீறி நோய்த் தொற்று பரவல் தொடர்ந்து அதிகரித்தால் முழு அளவிலான நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை அமல் செய்வது குறித்து முடிவெடுக்கப்படும் என்றார் அவர்.
சிலாங்கூரில் கோவிட்-19 நோய்த் தொற்றுச் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவது தொடர்பில் நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இதனைக் கூறினார்.
சிலாங்கூர் மாநிலம் கடந்த 15ஆம் தேதி 1,507 கோவிட்-19 சம்பவங்களையும் 16ஆம் தேதி 1,275 சம்பவங்களையும் இன்று 1,650 சம்பவங்களையும் பதிவு செய்தது.


