ஷா ஆலம், மே 17- கூட்டரசு பிரதேசத்திலும் இலவச கோவிட்-19 பரிசோதனை மிகப்பெரிய அளவில் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று பக்கத்தான் ஹராப்பான் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.
இம்மாதம் 14ஆம் தேதி தொடங்கி 16 ஆம் தேதி வரையிலான மூன்று நாட்களில் அம்மாநிலத்தில் 300க்கும் மேற்பட்ட கோவிட்-19 சம்பவங்கள் தொடர்ச்சியாக பதிவாகியுள்ளதன் அடிப்படையில் இந்த இலவச கோவிட்-19 பரிசோதனை இயக்கம் தேவைப்படுகிறது என்று அக்குழு கூட்டறிக்கை ஒன்றில் கூறியது.
சிலாங்கூர் மாநிலத்தை பின்பற்றி இலவச கோவிட்-19 பரிசோதனை இயக்கத்தை நடத்தும்படி கூட்டரசு பிரதேச அமைச்சரை ஒன்பது நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்ட அந்த அறிக்கை கேட்டுக் கொண்டது.
கடந்த 8ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை நடத்தப்பட்ட இலவச சோதனைகளில் 20 முதல் 40 வயது வரையிலான 80 விழுக்காட்டினர் நோய்த் தொற்றுக்கான எந்த அறிகுறியும் கொண்டிருக்கவில்லை என்று அவர் கூறியது.
கோவிட்-19 நோய்த் தொற்று அதிகரிப்பை கூட்டரசு பிரதேச அமைச்சர் ஒரு படிப்பினையாக கொள்ள வேண்டும் என்பதோடு மாநகரில் நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கான புதிய அணுகுமுறைகளையும் ஆராய வேண்டும்.
எந்த அறிகுறியையும் கொண்டிராத கோவிட்-19 நோயாளிகளை அடையாளம் காண இந்த இலவச பரிசோதனை இயக்கம் பெரிதும் துணை புரியும். இத்தகைய தரப்பினரை முன்கூட்டியே அடையாளம் காணாத பட்சத்தில் நோய்த் தொற்று பிறருக்கும் பரவும் அபாயம் உள்ளது என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


