கோலாலம்பூர், மே 17- கோவிட்-19 நோய்த் தொற்றினால் இறந்தவர்களின் உடல்களை வைப்பதற்கு கூடுதலாக சிறப்பு கொள்கலன்களை ஏற்பாடு செய்ய வேண்டிய நிர்பந்தம் சுங்கை பூலோ மருத்துவமனைக்கு ஏற்பட்டுள்ளது.
நேற்று மட்டும் கோவிட்-19 தொடர்புடைய ஆறு மரணச் சம்பவங்கள் சுங்கை பூலோ மருத்துவமனையில் பதிவானதாக சுகாதார அமைச்சு டிவிட்டர் வழி வெளியிட்ட அறிக்கை கூறியது.
நாட்டில் பதிவான கோவிட்-19 மரணச் சம்பவங்களில் 80 விழுக்காட்டிற்கும் மேற்பட்டவை முதியோர் சம்பந்தப்பட்டவை என்பதோடு அவர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட கடுமையான நோயினால் பாதிக்கப்பட்டிருந்தனர் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் மூலம் பலருக்கு நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளது. நோய்த் தாக்கம் அதிகம் உள்ளவர்களுடன் வசிக்கும் பட்சத்தில் உங்களையும் உங்களின் பாசத்திற்குரியவர்களையும் பாதுகாத்துக் கொள்ளுங்கள் என அமைச்சு அறிவுரை கூறியது.
நேற்று நாடு முழுவதும் 3,780 கோவிட்-19 சம்பவங்கள் பதிவான வேளையில் 36 பேர் அந்நோய்க்கு பலியாகினர். இந்நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 3,990 ஆகும்.


