கோலாலம்பூர், மே 16- இங்குள்ள உயர்கல்விக் கூடம் ஒன்றில் நடைபெற்ற நோன்புப் பெருநாள் மற்றும் உதவிப் பொருள் வழங்கும் நிகழ்வில் நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகளை (எஸ்.ஒ.பி.) உயர்கல்வி அமைச்சின் தலைமைச் செயலாளர் மீறியதாக கூறப்படுவது தொடர்பில் போலீசார் விசாணை நடத்தி வருகின்றனர்.
அச்சம்பவம் தொடர்பில் இணைய ஊடகம் ஒன்றில் வெளியான செய்தியை மையமாக கொண்டு செய்யப்பட்ட புகாரின் அடிப்படையில் இந்த விசாரணை நடத்தப்படுவதாக செர்டாங் மாவட்ட இடைக்கால போலீஸ் தலைவர் சூப்பிரிண்ட். முகமது ரோஸ்டி டாவுட் கூறினார்.
அந்த பல்கலைக்கழகத்தின் 13வது தங்குமிட கல்லுரியில் நடைபெற்ற நிகழ்வின் போது தலைமைச் செயலாளர் எஸ்.ஒ.பி. விதிகளை மீறியதாக அந்த இணைய ஊடகம் செய்தி வெளியிட்டிருந்தது.
பல்கலைக்கழக மாணவர்களும் நிர்வாகப் பணியாளர்களும் கலந்து கொண்ட அந்த நிகழ்வின் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தன.
இச்சம்பவம் தொடர்பில் 225/2021 (நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை எஸ்.ஒ.பி. மீறில்) பி.யு.(ஏ) விதிகளின் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
குற்றம் நிரூபிக்கப் பட்டால் நிகழ்வின் ஏற்பாட்டாளர்களுக்கு 10,000 வெள்ளி வரையிலான அபராதமும் வருகையாளர்களுக்கு 2,000 வெள்ளி வரையிலான அபராதமும் விதிக்கப்படும்.


