கிள்ளான், மே 3- செந்தோசா சட்டமன்றத் தொகுதி தொடக்கியுள்ள கல்வியில் பின்தங்கிய மாணவர்களுக்கான சிறப்பு கல்வித் திட்டத்தில் 25 மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.
கல்வியில் மிகவும் மந்தமாக இருக்கும் மாணவர்களை இலக்காக கொண்ட இந்த மூன்று மாத கால கல்வித் திட்டம் இலவசமாக மேற்கொள்ளப்படுவதாக சொந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் கூறினார்.
இம்மாணவர்களை பயிற்றுவிக்கும் பொறுப்பை சிலாங்கூர் டைலாக்சியா சங்கத்தைச் சேர்ந்த தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் ஏற்றுள்ளதாக அவர் சொன்னார்.
இந்த கல்வித் திட்டம் தொடர்பில் சம்பந்தப்பட்ட மாணவர்களின் பெற்றோர்களை சந்திதோம். அடுத்த மூன்று மாத காலத்திற்கு அம்மாணவர்களின் கல்வித் திட்டத்திற்கு உதவுவதாக வாக்குறுதியளித்துள்ளனர் என்றார் அவர்.
இம்மாணவர்கள் இந்த மூன்று மாத காலத்தில் 3எம் எனப்படும் எண், எழுத்து மற்றும் வாசிப்பில் சிறப்பான அடைவு நிலையைப் பெறுவார்கள் என நாங்கள் பெரிதும் எதிர்பார்க்கிறோம் என்று அவர் சொன்னார்.
இதனிடையே, ஒன்பது முதல் பதிமூன்று வயது வரையிலான மாணவர்கள் இத்திட்டத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக இந்த கல்வித் திட்ட இயக்குநர் டாக்டர் ஆர். உமாராணி கூறினார்.
திறன் அடிப்படையில் மாணவர்கள் பிரிக்கப்பட்டு ஐந்து மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் வீதம் சனிக்கிழமை தோறும் தொடர்ச்சியாக மூன்று மாத காலத்திற்கு பயிற்சிகள் வழங்கப்படும் என்று அவர் சொன்னார்.
கடந்த மாதம் 18ஆம் தேதி தொகுதி அலுவலகத்தில் நடைபெற்ற இத்திட்டத்திற்கான மாணவர் சேர்ப்பு நடவடிக்கையில் சுமார் 100 மாணவர்கள் கலந்து கொண்டனர்.


