ஷா ஆலம், மே 3- இம்மாதம் 4 அல்லது 5ஆம் தேதி தொடங்கி சிலாங்கூர் முழுவதும் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமல்படுத்தப்படும் என சமூக ஊடகங்களில் பரவலாகி வரும் செய்தியில் உண்மை இல்லை என்று மாநில மந்திரி புசார் பத்திரிகை செயலகம் கூறியது.
கடந்த 1ஆம் தேதி நடைபெற்ற மாநில பாதுகாப்பு பணிக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகள் மற்றும் பரிந்துரைகள் தொடர்பான செய்திகள் சமூக ஊடகங்களில் வெளிவந்துள்ளதாக அது தெரிவித்தது.
சமூக ஊடகங்களில் வெளியானது பொய்யான செய்தி என்று நாங்கள் உறுதிபடுத்த விரும்புகிறோம் என்று அச்செயலகம் கூறியது.
கடந்த மாதம் 27ஆம் தேதி முதல் சிலாங்கூர் அதிக எண்ணிக்கையிலான கோவிட்-19 சம்பவங்களை தொடர்ச்சியாக பதிவு செய்து வருகிறது.
சிலாங்கூர் மாநிலத்தில் அமலில் இருக்கும் நிபந்தனையுடன் கூடிய நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை மறுஆய்வு செய்வது தொடர்பில் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கடந்த மாதம் 30ஆம் தேதி சிலாங்கூர் மாநில பாதுகாப்பு பணிக்குழுவுடன் சந்திப்பு நடத்தினார்.


