ECONOMY

கோவிட்-19 அதிகரிப்பை காரணம் காட்டி அவசரகாலத்தை பெரிக்கத்தான் அரசு நீட்டிக்கும்- அன்வார் கணிப்பு

27 ஏப்ரல் 2021, 9:27 AM
கோவிட்-19 அதிகரிப்பை காரணம் காட்டி அவசரகாலத்தை பெரிக்கத்தான் அரசு நீட்டிக்கும்- அன்வார் கணிப்பு

ஷா ஆலம், ஏப் 27- வரும் ஆகஸ்டு மாதத்துடன் முடிவடையும்  அவசரகாலத்தை நீட்டிப்பதற்கு கோவிட்-19 பெருந்தொற்று அதிகரிப்பை பெரிக்கத்தான் நேஷனல் அரசாங்கம் காரணமாக காட்டுவதற்குரிய சாத்தியம் உள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

கடந்த ஜனவரி மாதம் 12ஆம் தேதி அமலுக்கு வந்த அந்த அவசரகாலப் பிரகனடம் விரைவில் முடிவுக்கு வருவதற்கான சாத்தியம் தென்படவில்லை என்று அவர் சொன்னார்.

நோய்த் தொற்று எந்த  அளவுக்கு அதிகமாக இருக்குமோ அந்த அளவுக்கு அவசரகாலத்தை நீட்டிப்பதை ஆளும் தரப்பினர் நோக்கமாக கொண்டுள்ளனர் என நான் கருதுகிறேன் என்றார் அவர்.

தடுப்பூசி செலுத்தும் பணிகள் குறைவான அளவில் மேற்கொள்ளப்படும் நிலையில் இவ்வாண்டு இறுதிவரை நாடாளுமன்றம் கூட்டப்படுவதற்கான சாத்தியம் அறவே இல்லை என எண்ணத் தோன்றுகிறது என்றார் அவர்.

அவசரகாலம் முடிவுக்கு வந்தவுடன் உடனடியாக நாடாளுமன்றம் கூட்டப்படும் என்று பிரதமர் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ தாக்கியுடின் ஹசான் அறிக்கை ஒன்றில் கூறியிருந்தார்.

எனினும், அவசரகாலத்தை ரத்து செய்யும் நடவடிக்கையில் தேசிய பாதுகாப்பு மன்றம், சுகாதார அமைச்சு உள்ளிட்ட தரப்பினரின் ஆலோசனை கருத்தில் கொள்ளப்படும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

நாடாளுமன்றத்தைக் கூட்டுவதில் உள்ள கடப்பாட்டை அரசாங்கம் உணர்ந்துள்ளது. அதே சமயம் பாதுகாப்புக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டியுள்ளது. கோவிட்-19 நோய்த் தொற்றை முற்றாக துடைத்தொழிப்பது முக்கிய கடமையாக உள்ளது என்று அவர் தெரிவித்திருந்தார்.

அமைச்சர் தாக்கியுடினின் இந்த அறிக்கை ஜனநாயகத்தின் அடிப்படை கோட்பாடுகள் மீது அவருக்கு புரிதல் இல்லாததை காட்டுகிறது என்று அன்வார் கூறினார்.

கோவிட்-19 பெருந்தொற்றை கட்டுப்படுத்துவதில் அரசாங்கம் பெரிக்கத்தான் முழுமையாக முன்னுரிமை அளிப்பதாகவும் அதுவரை நாடாளுமன்றம் மூடப்பட்டிருக்கும் என்றும் அமைச்சர் கூறுகிறார்.

கோவிட்-19 பெருந்தொற்றை ஒழிப்பதில் நாடாளுமன்றத்தை முடக்கி வைப்பது மிக முக்கியமானது என்ற தோற்றத்தை இது ஏற்படுத்துகிறது. ஆயினும் நோய்ப் பரவல் இன்னும் மோசமான நிலையை எட்டி வருகிறது என்று அன்வார் குறிப்பிட்டார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.