ஷா ஆலம், ஏப் 26- நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமல்படுத்தப்பட்ட பந்திங் அறிவியல் இடைநிலைப் பள்ளிக்கு மோரிப் சட்டமன்ற உறுப்பினர் ஹஸ்னுள் பகாருடின் 1,000 போத்தல் கனிம நீரை வழங்கினார்.
அந்த பள்ளியில் உள்ள மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் தேவையை ஈடுசெய்யும் நோக்கில் இந்த நீர் விநியோகம் செய்யப்படுவதாக அவர் சொன்னார்.
அந்த பள்ளியில் உள்ளவர்களுக்கு குடிநீர் தேவைப்படுவதாக அறிந்தேன். அவர்களுக்கு உதவும் வகையில் பெரிய அளவிலான கனிம நீர் போத்தல்களை நேற்று விநியோகம் செய்தேன் என்றார் அவர்.
நடமாட்டக் கட்டுப்பாடு ஆணை முறையாக பின்பற்றப்படுவதை உறுதி செய்ய அப்பள்ளியில் உள்ளவர்களின் தேவை அடிக்கடி கேட்டறியப்படும். அதே சமயம் அங்குள்ள பணியாளர்களின் தேவையும் கவனத்தில் கொள்ளப்படும் என்றார் அவர்.
அப்பள்ளியில் கடந்த சனிக்கிழமை தொடங்கி மே மாதம் 7ஆம் தேதி வரை நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமல் செய்யப்பட்டுள்ளது. அங்கு மாணவர்கள், ஆசிரியர்கள், பணியாளர்கள் உள்பட 966 பேர் தங்கியுள்ளனர்.
அப்பள்ளியில் உள்ள 473 பேரிடம் நடத்தப்பட்ட கோவிட்-19 பரிசோதனையில் 71 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது கண்டு பிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து அங்கு நடடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை பிறப்பிக்கப்பட்டது.


