ECONOMY

கட்டுமானப் பகுதிகளில் பாதுகாப்புக்கு சிலாங்கூர் அரசு முன்னுரிமை

24 மார்ச் 2021, 7:23 AM
கட்டுமானப் பகுதிகளில் பாதுகாப்புக்கு சிலாங்கூர் அரசு முன்னுரிமை

ஷா ஆலம், மார்ச் 24- பொது கட்டுமானப் பகுதிகளில் பாதுகாப்புக்கு சிலாங்கூர் அரசு எப்போதும் முன்னுரிமை அளித்து வருகிறது.

விரும்பத்தகாத சம்பவங்கள் நிகழ்வதை தவிர்ப்பதற்காக எந்நேரமும் கவனப்போக்குடன் செயல்படும்படி கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளும் தரப்பினர் அறிவுறுத்தப் படுவதாக அடிப்படை வசதிகள் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இஷாம் ஹஷிம் கூறினார்.

விபத்துகள் நிகழும் பட்சத்தில் சாலைகளைப் பயன்படுத்துவோரே அதிகம் பாதிக்கப்படுவது விசாரணைகள் வழி தெரியவந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

பணியிடங்களில் கடைபிடிக்க வேண்டிய முறையான  நிர்வாக நடைமுறைகளை (எஸ்.ஒ.பி.) நாம் கொண்டுள்ளோம். எனினும் மனிதர்களுக்கே இயல்பாக ஏற்படும் மறதி அல்லது அலட்சியப் போக்கு காரணமாக இத்தகைய விபத்துகள் ஏற்படுகின்றன என்றார் அவர்.

சுங்கை பீசி-உலு சிளாங் அடுக்குச் சாலை நிர்மாணிப்புப் பகுதியில் கிரேன் விழுந்த சம்பவம் தொடர்பில் கருத்துரைத்த போது அவர் இதனைத் தெரிவித்தார்.

அந்த நெடுஞ்சாலையின் கட்டுமானம் தாமதமான நிலையில் அதனை விரைந்து முடிப்பதற்காக நேர காலம் பார்க்காமல் ஊழியர்கள் பணியில் ஈடுபட்டதால் ஏற்பட்ட சோர்வு இவ்விபத்து ஏற்படுவதற்கு காரணமாக அமைந்திருக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.

பணியிடங்களில் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக தமது தரப்பு மலேசிய நெடுஞ்சாலை வாரியத்துடன் விவாதித்து வருவதாகவும் அவர் சொன்னார்.

நேற்று முனதினம் கோலாலம்பூர், ஜாலான் அம்பாங் டாமாய் பகுதியிலுள்ள கட்டுமானத் தளத்தில் 40 மீட்டர் உயரம் கொண்ட கிரேன்  சாலையில் விழுந்த சம்பவத்தில் ஐவர் இடிபாடுகளில் சிக்கினர்.

இவ்விபத்தில் இரு வெளிநாட்டுத் தொழிலாளர்கள் உயரிழந்ததோடு மேலும் மூவர் காயங்களுக்குள்ளாயினர்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.