கிள்ளான், மார்ச் 12- கோலக் கிள்ளான் ஜாலான் ஜெத்தியில் உள்ள சிலாங்கூர் மாநில அரசுக்கு சொந்தமான ஒரு ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்த பலகைத் தொழிற்சாலை ஒன்று இன்று காலை அதிகாரிகளால் உடைக்கப்பட்டது.
கிள்ளான் மாவட்ட துணை அதிகாரி முகமது சைபுல் அஸ்ரி பவுசி தலைமையில் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையில் கிள்ளான் நகராண்மைக்கழகம், ஸ்பான் எனப்படும் தேசிய நீர் ஆணையம், வடிகால் மற்றும் நீர் பாசனத்துறை, தெனாகா நேஷனல் ஆகிய துறைகளைச் சேர்ந்த 50 அமலாக்க அதிகாரிகள் பங்கு கொண்டனர்.
ஆற்றிலிருந்து சுமார் ஐம்பது மீட்டர் தொலைவில் கட்டப்பட்டிருந்த கிடங்கு மற்றும் தொழிலாளர் குடியிருப்புகளும் இந்நடவடிக்கையின் போது உடைக்கப்பட்டன.
நிலத்தை காலி செய்யக் கோரும் உத்தரவு கடந்த 2018 டிசம்பர் 4ஆம் தேதி, 2019 ஜனவரி 15ஆம் தேதி மற்றும் 2021 பிப்ரவரி 3ஆம் தேதிகளில் சம்பந்தப்பட்ட பலகை தொழிற்சாலை உரிமையாளருக்கு பிறப்பிக்கப்பட்டதாக முகமது சைபுல் சொன்னார்.
மூன்று முறை பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளையும் அதன் உரிமையாளர் புறக்கணித்த காரணத்தால் அத்தொழிற்சாலையை உடைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டது என்றார் அவர்.
1965ஆம் ஆண்டு தேசிய நிலச் சட்டத்தின் 425 மற்றும் 426ஏ பிரிவின கீழ் சம்பந்தப்பட்ட தொழிற்சாலைக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டது. இச்சட்டப்பிரிவின் கீழ் குற்றவாளி என நிரூபிக்கப்படுவோருக்கு ஐந்தாண்டுகளுக்கும் மேற்போகாத சிறைத்தண்டனை அல்லது ஐந்து லட்சம் வெள்ளி வரையிலான அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம் என்றும் அவர் சொன்னார்.
அரசாங்கத் நிலத்தில் குறிப்பாக ஆற்றோரங்களில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட அனைத்து கட்டிடங்களையும் அகற்றும்படி மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி ஊராட்சி மன்றங்களுக்கு கடந்தாண்டு நவம்பர் மாதம் உத்தரவிட்டிருந்தார்.


