ஷா ஆலம், பிப் 28- சிலாங்கூர் மாநில அரசு சதுரங்கப் போட்டியை இயங்கலை வாயிலாக நடத்தவுள்ளது. இப்போட்டிக்கு மொத்த பரிசுத் தொகையாக 33,960 வெள்ளி வழங்கப்படும் என்று அது அறிவித்துள்ளது.
கிராண்ட் பிரிக்ஸ எக்டிவி 2021 எனும் தொடரில் முதல் கட்டமாக நடைபெறும் இந்த சதுரங்கப்போட்டி வரும் ஏப்ரல் மாதம் 10 மற்றும் 11 ஆம் தேதிகளில் நடைபெறும் என்று விளையாட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் முகமது கைருடின் ஓத்மான கூறினார்.
இந்த போட்டி 12 வயதுக்கும் கீழ்ப்பட்ட மகளிர் மற்றும் 18 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கான பொது நிலை என இரு பிரிவுகளாக நடத்தப்படும் என்று அவர் தெரிவித்தார்.
கிராண்ட் பிரிக்ஸ் பிளஸ் 1 மற்றும் கிராண்ட் பிரிக்ஸ் பைனல் போட்டிகள் நான்கு தொடர்களைக் கொண்டுள்ளன. சதுரங்கப் போட்டியில் தங்களுக்குள்ள திறமையை வெளிக் கொணர்வதற்குரிய அரிய வாய்ப்பு போட்டியாளர்களுக்கு கிட்டியுள்ளது என்று அவர் மேலும் சொன்னார்.
இந்த போட்டியை நடத்துவதற்கு சிலாங்கூர் மாநில விளையாட்டு மன்றமும் மலேசிய சதுரங்க சங்கமும் ஒத்துழைப்பு நல்கியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இப்போட்டியில் பங்கேற்க விரும்புவோர் 016-3382542 என்ற எண்களில் நஜிப் அப்துல் வஹாப் மற்றும் 107-5645183 என்ற எண்ணில் இவான் சானி இப்னு ஆகியோரை தொடர்பு கொள்ளலாம்.
மேலும் mcfsecretariat@malaysiachess.org/inquiries@malaysiachess.org அகப்பக்கம் வாயிலாக வரும் மார்ச் 29ஆம் தேதிக்குள் பதிவு செய்து கொள்ளலாம்.


